யுவனைக் கண்கலங்க வைத்த சினேகன்.. மகள் பிறந்த நாளில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

By John A

Published:

கவிஞரும், நடிகருமான சிநேகன் கவிப்பேரரசு வைரமுத்துவிடம் உதவியாளராக இருந்து பின் பாண்டவர் பூமி படத்தின் மூலம் சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகமானார். ஆனால் அதற்கு முன்பே நந்தா படத்தில் வாய்ப்புக் கிடைத்த போதும் அவரது பாடல் பதிவு செய்யப்படவில்லை. ஆனால் அதற்குப் பின் இயக்குநர் அமீர் யுவன்சங்கர் ராஜா இசையில் வெளிவந்த மௌம் பேசியதே படத்தின் மூலம் மீண்டும் வாய்ப்புக் கொடுக்க அப்படத்தில் சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்தார் கவிஞர் சிநேகன்.

இவ்வாறு ஆரம்பித்த இவர்கள் பயணம் மன்மதன், ராம், பருத்திவீரன், கழுகு போன்ற பல படங்களில் தொடர்ந்தது. இவர்கள் கூட்டணியில் உருவான பாடல்கள் அனைத்தும் தமிழ்த் திரையுலகில் இசை ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. யுவன்-நா.முத்துக்குமார் கூட்டணி போல், யுவன்-சினேகன் கூட்டணியும் தமிழ் சினிமாவில் பேசப்படும் ஒன்று.

இப்படி இவர்கள் கூட்டணியில் உருவான ஓர் அற்புதப் பாடல் தான் ராம் படத்தில் இடம்பெற்ற ‘ஆராரிராரோ நான் இங்கு பாட..’ என்ற பாடல். மன்னன் படத்தில் இடம்பெற்ற அம்மா என்றழைக்காத பாடலுக்குப் பிறகு தாயைப் பற்றிப் பாடும் புகழ்பெற்ற பாடலாக விளங்கியது ராம் படப் பாடல். இவ்விரு பாடல்களையுமே கே.ஜே.யேசுதாஸ் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஒருமுறை கவிஞர் சினேகனுக்கு யுவனிடமிருந்து போன் வந்திருக்கிறது. அப்போது அவர் வெளிநாட்டில் இருந்தார். எனவே ஏதேனும் பட அழைப்புப் பணியாக இருக்கும் என்று எண்ணி போனை பேசியபோது அப்போது யுவன் ஒருகணம் கண்கலங்கி பேசியிருக்கிறார். ஆம்..! அவருக்கு பெண் குழந்தை பிறந்திருந்தது. இந்தத் தகவலை கவிஞர் சிநேகனுக்கு மகிழ்ச்சியுடன் கண்கலங்கிக் கூறியிருக்கிறார்.

காதல் கோட்டை படம் இப்படித்தான் உருவாச்சா? அஜீத் சினிமா வாழ்க்கைய மாற்றிய அந்த தருணம்

கவிஞர் சிநேகனும் தனது வாழ்த்துக்களைச் சொல்ல, மீடியாக்களை பார்த்தீர்களா என்று கேட்டுள்ளார். சிநேகன் வெளிநாட்டில் இருந்ததால் பார்க்கவில்லை என்று கூற, அப்போது யுவன் அவரிடம் ஒரு விஷயத்தினைப் பகிர்ந்திருக்கிறார். தாயின் சிறப்பைப் போற்றும் பாடல் வரிகளான ‘ஆராரிராரோ நான் இங்கு பாட..‘ பாடல் வரிகளில் இடம்பெறும் ‘தாயே எந்தன் மகளாய் மாற..‘ என்ற வரிகளைப் போட்டு சோஷியல் மீடியாக்களில் யுவனுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருந்தது.

இதில் என்னவொரு சிறப்பு என்றால் யுவனின் தாய் ஜீவா அம்மையார் மறைந்த நினைவு நாளில்தான் அவருக்குப் பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இதனால் யுவன் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக அன்று இருந்திருக்கிறார். மேலும் சினேகனின் வரிகளும் அதை நெகிழ்ச்சியுடன் கொண்டாட வைத்திருக்கிறது.