நடிகவேள் எம்.ஆர். ராதாவைப் பற்றி பல சுவாரஸ்யமான செய்திகள் உள்ளன. எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற திரை பிம்பங்களுக்கு மத்தியில் அனைவரையும் நடிப்பில் தூக்கிச் சாப்பிட்டு விடுவார். இதேபோல் அவருடைய தனிப்பட்ட வாழ்வும் சர்ச்சைகள் நிறைந்ததாகவே இருந்தது. எம்.ஆர். ராதா நாடக மேடைகளில் வாழ்ந்தவர். ஆனால் நிஜ வாழ்க்கையில் ஒருபோதும் நடித்திராதவர். நாடகக்காரர், பகுத்தறிவுவாதி, சினிமா நடிகர், பெரியாரின் தொண்டர், அதிரடிப் பேச்சாளார், குடும்பத் தலைவர், சிறைச்சாலைக் கைதி என்று அவருடைய வாழ்க்கையில் ஏகப்பட்ட பாத்திரங்கள். ஆனால் எதிலுமே அவர் அரிதாரம் பூசியதில்லை. ராதா, ராதாவாகவே வாழ்ந்தார்.
எம்.ஆர்.ராதா வசனங்களை மனப்பாடம் செய்யும் முறை சற்று வித்தியாசமானது. அவரது நாடகக் குழுவிலிருந்த அறிவானந்தம் என்ற சிறுவன் வசனங்களை வாசிக்க ஆரம்பிப்பான். ராதாவிடமிருந்து பதிலோ, அசைவோ இருக்காது. அவர் தூங்கி விட்டாரோ என்று நினைத்து அறிவு நிறுத்துவான். ‘ம்..’ என்று குரல் கொடுப்பார் ராதா. இப்படி வசனங்களை தொடர்ந்து மூன்று நாள்கள் வாசித்தால் போதும். அதற்குப் பின் ராதாவுக்குப் பாடம் தேவையில்லை. அவரது ஞாபக சக்தி அந்த அளவுக்கு அபாரமானது.
ராதா அரங்கேற்றியதில் அதிக சர்ச்சைகளை உண்டாக்கிய நாடகம் ராமாயணம். ராதாவுக்காக நாடகத் தடை மசோதாவை சட்டமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றுமளவு பிரச்னை வலுத்தது. அதை மீறியும் ராமாயணத்தை பலமுறை வெற்றிகரமாக அரங்கேற்றினார் ராதா. மதுரையில் அன்று மாலை ராமாயணம் நாடகம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. நாடகத்தை எப்படி நடத்துகிறாய் என்று பார்க்கிறேன் என்று பகிரங்க மிரட்டல் விடுத்தார் அணுகுண்டு அய்யாவு என்பவர்.
நாடகம் ஆரம்பமானது. அரங்கத்தினுள் சில ரவுடிகளுடன் புகுந்து கலகம் செய்ய ஆரம்பித்தார் அய்யாவு. ராதா, தன் குழுவிலுள்ள பெண்களையும் சிறுவர்களையும் மட்டும் பத்திரமாக வண்டியேற்றி அங்கிருந்து அனுப்பினார். பின்னர் கோதாவில் குதித்தார்.
‘டேய் அந்த ரிவால்வரை எடுடா. குண்டு ஃபுல்லா இருக்கா? ஆறு குண்டு ஆறு பேரு. சுட்டுத் தள்ளிடறேன்’ – அரங்கம் அதிரக் கத்தினார். யாருக்கும் ரிவால்வர் இருக்கிறதா என்று கூடத் தெரியாது. ஆனால் அய்யாவு கும்பல் பயந்து சிதறி ஓடியது.
அதன்பின் வெற்றிகரமாக நாடகத்தை நடத்தினார். அன்றைய வசூல் தொகை மூவாயிரம் ரூபாய். இதுபோல் பல சமயங்களில் எம்.ஆர்.ராதா தனது துணிச்சலால் எதிராளியை அலற விட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.