நடிக வேள் எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரைச் சுட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு வரலாற்று நிகழ்வு. அதுவரை கம்பீரமான குரலில் பேசி நடித்த எம்.ஜி.ஆர், எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆருக்கு வைத்த குறி தொண்டையில் பட்டதால் தனது பேச்சுத் திறனை பாதியாக இழந்தார் எம்.ஜி.ஆர். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அவரின் குரல் மாறி அந்தக் குரலிலேயே நடித்தார் எம்.ஜி.ஆர்.
இதில் முக்கியமாக ஒன்று என்னவென்றால் எம்.ஆர்.ராதா துப்பாக்கிப் பயிற்சி எடுத்தது எம்.ஜி.ஆரைச் சுட அல்ல. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனைச் சுட வேண்டும் என்பதற்காகத்தான். ஏன் தெரியுமா?
கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் நாடகக் குழுவில் இழந்த காதல் என்றொரு நாடகம் போடப்பட்டது. அதில் ஜெகதீஷ் என்ற கதாபாத்திரத்தில் எம்.ஆர். ராதா நடிக்கிறார். இந்த நாடகம் அப்போது பெரும் வெற்றி பெற்றது. திரையிட்ட இடங்களிளெல்லாம் எம்.ஆர்.ராதாவின் நடிப்பைப் பார்க்க கூட்டம் அலைமோதியது. இவ்வாறு பெரும் வெற்றி பெற்ற இந்த நாடகத்தை திரைப்படமாக எடுக்க எண்ணி என்.எஸ்.கிருஷ்ணன் விரும்ப இனி இந்த நாடகம் போடப்பட்டால் எம்.ஆர். ராதா அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டாம் என்று கூறிவிட்டார்.
மேலும் அந்தக் கதாபாத்திரத்தில் டி.எஸ். பாலையா நடிக்க எம்.ஆர்.ராதா என்.எஸ்.கிருஷ்ணன் மீது பெருங்கோபம் கொண்டார். மேலும் இரசிகர்களும் எம்.ஆர்.ராதாவையே கேட்க நாடக அரங்கில் கூச்சல் குழப்பம் நிலவியது. எம்.ஆர்.ராதாவோ என்.எஸ்.கிருஷ்ணன் என் புகழைக் கெடுப்பதற்காகவே இவ்வாறு செய்கிறார் என்று எண்ணினார். இதனால் அவரைக் கொலை செய்ய திட்டம் தீட்டி துப்பாக்கி வாங்கி பயிற்சி எடுக்கிறார்.
என்.எஸ்.கிருஷ்ணனுக்கும் இந்தத் தகவல் தெரிய ஒருநாள் எம்.ஆர்.ராதாவின் முன்னிலையில் என்.எஸ்.கிருஷ்ணன் சென்று என்னைச் சுட வேண்டும் என்று கங்கனம் கட்டிக் கொண்டு இருக்கிறாய் அல்லவா இதோ வந்துவிட்டேன் சுடு என்று தன் மார்பை உயர்த்திக் காட்டுகிறார் என்.எஸ்.கிருஷ்ணன். நான் அந்தக் கதாபாத்திரத்தில் உன்னை நடிக்க வைக்க வில்லை என்று தானே கோபம். ஏன் நடிக்க வைக்கவில்லை தெரியுமா? என்னிடம் எவ்வளவு வசதிகள் இருக்கிறது தெரியுமா? ஆனால் அவ்வளவு இருந்தும் உன்னிடம் இருக்கும் அந்த நடிப்புக்கலை என்னிடம் கிடையாது.
நான் உன்னை வைத்து இயக்குவதற்குரிய தகுதியும் எனக்குக் கிடையாது. அதனால் தான் அந்த நாடகத்தில் உன்னை நடிக்க வைக்க வேண்டாம் என்று விரும்பினேன். உன் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கம் இல்லை என்று என்.எஸ்.கிருஷ்ணன் கூற உடனே எம்.ஆர்.ராதா துப்பாக்கியை எடுத்து என்.எஸ்.கே கையில் கொடுத்து உங்களைத் தவறாக நினைத்து விட்டேன் நீங்களே என்னைச் சுடுங்கள் என்று கதறியிருக்கிறார். பின் இருவரும் சமாதானம் ஆகினர். இவ்வாறு தனது விரோதியைக் கூட உற்ற நண்பனாக என்.எஸ்.கிருஷ்ணன் மாற்றிக் காட்டிய மனசுக்குச் சொந்தக்காரர்.