1980களில் திரையுலகில் ரஜினி மற்றும் கமல் முன்னணி நடிகர்களாக இருந்த போதும் கொடிகட்டி பறந்த நடிகர் மோகன். வெள்ளி விழா நாயகன் தான் ரசிகர்களின் மைக் மோகன். ஒரு சில படங்களில் மட்டுமே மோகன் பாடகராக நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் மைக் மோகன் என்று தான் இன்றும் நிலைத்து நிற்கிறார். அதற்கு காரணம் அவர் நடித்த படங்களில் வரும் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது தான். இதனால் மோகன் படம் என்றாலே பாடல் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் ரசிகர்களிடையே எழுந்து விட்டது.
இளைஞர்களை விட இளம் பெண்களுக்கு அதிகம் பிடித்த மைக் மோகன் கமல்ஹாசனுக்கு அடுத்ததாக காதல் மன்னனாக பார்க்கப்பட்டார். எத்தனையோ வதந்திகள் மோகனை சுற்றி வந்துள்ளது. அதில் மிக முக்கியமானது அவர் எய்ட்ஸ் வந்து இறந்து விட்டார் என்பதுதான். இதனால் சில ரசிகர்கள் மோகன் அவர்களது வீட்டிற்கு மாலையுடன் சென்று அவரை மிகுந்த வேதனையடைய செய்துள்ளனர். ஒரு பேட்டியில் இந்த சம்பவத்தை மோகன் பகிர்ந்துள்ளார்.
1980 மற்றும் 90களில் ஏராளமான படங்களில் நடித்த மோகன் அதன் பிறகு சிறிய இடைவெளி எடுத்துக் கொண்டார். ஆரம்பத்தில் 20 மணி நேரம் 22 மணி நேரம் என தொடர்ந்து பணிபுரிந்து, அடுத்தடுத்து மோகன் படங்கள் வெளியானது. அதன் பிறகு திருமணம், குடும்ப வாழ்க்கை என்று மோகன் அவர்கள் இடைவேளை எடுத்துக்கொண்டார். வாழ்க்கை வேறு சினிமா வேறு என்பதில் தெளிவாக இருந்த மைக் மோகன் ஒரு இடத்தில் கூட தனது மனைவியுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிடவோ வெளியிட அனுமதித்ததோ கிடையாது.
பேட்டி ஒன்றில் மோகன் பேசிய போது தொலைக்காட்சியில் நான் நடித்த படங்கள், பாடல்கள் போன்றவற்றை போடும்போது எனக்கும் ரசிகர்களுக்கும் இடையே எந்த இடைவெளியும் இல்லை. சினிமாவில் முதல் பாதி முடிந்து இடைவெளிக்கு பின் இரண்டாம் பாதி தொடங்கும். அதேபோன்று மோகன் அவர்களது வாழ்க்கையிலும் முதல் பாதி முடிந்து இடைவெளி எடுக்கப்பட்டு இரண்டாவது பாதி தொடங்கி இருப்பதாக அவர் கூறியுள்ளார்.