கமல்ஹாசன் நடிப்பில் மைக்கேல் மதன காமராஜன் படம் கடந்த 1990ல் இதே நாளில் வந்தது. அதற்கு முன் கமலை வைத்து மிக சீரியஸான சவால் மிக்க அபூர்வ சகோதரர்கள் என்ற படத்தை இயக்கி இருந்த சிங்கிதம் சீனிவாசராவ் அதற்கு நேர்மாறாக முற்றிலும் காமெடிப்படமாக இப்படத்தை இயக்கினார்.

கமல் நான்கு வேடங்களில் நடித்து கலக்கி இருந்தார். மகாபாரதத்தில் நடித்து இருந்த பீமன் ரகு இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கலக்கி இருந்தார்.
இவர் வந்தாலே வீடே அதிர்வது போல கதாபாத்திரம் இவருக்கு கொடுக்கப்பட்டிருந்தது. க்ளைமாக்ஸில் ஒரு மலையில் உள்ள பாழடைந்த பங்களாவில் இவர் ஏறும்போது அந்த மலை இடிந்து விழ முயற்சிப்பதும் உள்ளே மாட்டிக்கொண்ட படக் கதாபாத்திரங்கள் வெளியே வர முடியாமல் தவிப்பதும் வெடிச்சிரிப்பை வரவைத்தன.

கமல், பீமன் ரகு, சந்தானபாரதி, நாகேஷ், டெல்லி கணேஷ்,வெண்ணிற ஆடை மூர்த்தி,குஷ்பு, ரூபிணி, ஊர்வசி, எஸ்.என் லட்சுமி, மனோரமா, என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது.
படம் நகைச்சுவை மழையில் பலரை மூழ்கடித்தது என சொல்லலாம்.
பீம்பாய் பீம்பாய் அந்த லாக்கர்லே இருக்கற ஆறு லக்சத்தை எடுத்து அந்த அவினாசி மூஞ்சில விட்டேறி என்று நாகேஷ் பேசும் வசனங்கள் புகழ்பெற்றது.
சிவராத்திரி தூக்கம் ஏது, பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்,ரம்பம்பம் ஆரம்பம், சுந்தரி நீயும் சுந்தரன் நானும் போன்ற இனிமையான இளையராஜாவின் பாடல்களும் பின்னணி இசையும் படத்துக்கு பலம் சேர்த்தது.
க்ளைமாக்ஸ் காட்சி சென்னையில் உள்ள பரங்கிமலையில் படமாக்கப்பட்டது. இந்த காட்சி படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் ஆக இருந்தது.
இந்த படம் இன்றுடன் வெளியாகி 29 வருடங்கள் ஆகி விட்டதாம். இப்படம் தீபாவளி நாளில் வெளியானது குறிப்பிடத்தக்கது
