தமிழ் சினிமாவின் முதல் பாக்ஸ் ஆபிஸ் கிங்-ஆகத் திகழ்ந்த எம்.ஜி.ஆர்., எந்தப் படம் எவ்வளவு வசூல் தெரியுமா?

By John A

Published:

இன்று 100 கோடி, 500 கோடி, 1000 கோடி என உச்ச நட்சத்திரங்களின் படங்கள் போட்டி போட்டுக் கொண்டு பாக்ஸ் ஆபிஸில் தெறிக்க விட அந்தக் காலகட்டத்தில் சப்தமே இல்லாமல் பல படங்களில் வசூல் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்து பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக ஜொலித்திருக்கிறார் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் தன் பங்கு வசூல் மழை பொழிய விட திரையுலகில் இவர்களது ஆதிக்கமே அதிகமாக இருந்ததுள்ளது. இவ்வாறு எம்.ஜி.ஆர் நடிப்பில் கல்லா கட்டிய படங்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.

ஆரம்பத்தில் எம்.ஜி.ஆருக்கு சின்னச் சின்ன வேடங்களே கிடைத்தன. 1947 இல் வெளியான ராஜகுமாரியில் அவர் முதன்முதலாக நாயகனாக நடித்தார். அதனை தொடர்ந்து பைத்தியக்காரன், அபிமன்யூ, ராஜமுக்தி, மோகினி படங்களில் நாயகன் வேடம் அமைந்தது. 1950களின் தொடக்கத்திலிருந்து எம்.ஜி.ராமச்சந்திரனின் அலை வீசத் தொடங்கியது. 1958 இல் வெளியான நாடோடி மன்னனுக்குப் பிறகு அவரது படங்கள் தனிக்கவனம் பெற ஆரம்பித்தன. சென்னை மாநகரில் அவரது 8 திரைப்படங்கள் 13 லட்சங்களை கடந்து வசூலித்துள்ளன. இதுவொரு சாதனையாக பார்க்கப்படுகிறது. அந்தப் படங்கள்..

1. எங்க வீட்டுப் பிள்ளை (1965)
1964 இல் தெலுங்கில் வெளியான ராமுடு பீமுடு படத்தை தமிழில் எங்க வீட்டுப் பிள்ளையாக எடுத்தனர். எம்.ஜி. ராமச்சந்திரன் இரு வேடங்களில் நடித்த இந்தப் படம் மாபெரும் வெற்றியை பெற்றது. சென்னையில் இதன் வசூல் 13.23 லட்சங்கள் ஆகும்.
2. அடிமைப் பெண் (1969)
கே.சங்கர் இயக்கத்தில் எம்.ஜி. ஆரின் மற்றுமொரு வசூல் சாதனைப் படம். இரட்டை வேடங்களில் நடித்த அடிமைப்பெண் மாபெரும் வெற்றிப் படைப்பானது. இதன் சென்னை வசூல் 13.60 லட்சங்கள்.

3. மாட்டுக்கார வேலன் (1970)
1966 கன்னடத்தில் வெளியான எம்மி தம்மன்னா படத்தை தமிழில் மாட்டுக்கார வேலனாக எடுத்தனர். படம் சக்கைப் போடு போட்டது. சென்னையில் இந்தப் படத்தின் வசூல் 13.21 லட்சங்கள்.
4. ரிக்ஷாக்காரன் (1971)
எம்.கிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான ரிக்ஷாக்காரன் எம்.ஜி.ஆருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்தது. இந்தப் படத்தின் சென்னை வசூல் 16.84 லட்சங்கள்.

இவர்தான் எம்.ஜி.ஆர் எனத் தெரியாத கமலின் மகள்.. எம்.ஜி.ஆர் எப்படி நிரூபித்தார் தெரியுமா?

5. உலகம் சுற்றும் வாலிபன் (1973)
எம்.ஜி. ராமச்சந்திரன் இயக்கி, நடித்த உலகம் சுற்றும் வாலிபன் அவரது சாதனை மைல் கல் திரைப்படங்களுள் ஒன்று. அவரின் முந்தைய சாதனைகளை அவரே முறியடித்து கல்லா கட்டியது. இந்தப் படத்தின் சென்னை வசூல் 23.40 லட்சங்கள்.
6. இதயக்கனி (1975)
திமுகவிலிருந்து பிரிந்து அதிமுகவை தொடங்கிய பின் தனது கட்சியை பிரபலப்படுத்த எம்.ஜி. ராமச்சந்திரன் நடித்தப் படங்களுள் ஒன்று இதயக்கனி. இதன் சென்னை வசூல் 19.89 லட்சங்கள்.

7. மீனவ நண்பன் (1977)
மீனவ நண்பன் எம்.ஜி.ஆரின் இன்னொரு வெற்றிப் படம். மீனவ நண்பனின் சென்னை வசூல் 17.70 லட்சங்கள்.
8. இன்று போல் என்றும் வாழ்க (1977)
எம்.ஜி. ராமச்சந்திரனின் மற்றுமொரு அதிமுக பிரச்சாரப் படம். அடிமைப் பெண்ணை இயக்கிய கே.சங்கரின் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தின் சென்னை வசூல் 15.68 லட்சங்கள். மேலும் 1977 வரை எம்.ஜி. ஆரின் படங்களைத் தவிர எந்த நடிகரின் படங்களும் சென்னையில் 13 லட்சங்களை கடந்து வசூலித்ததில்லை என்ற தகவலும் உண்டு.