தமிழ் சினிமாவில் பெண் கவிஞர்கள் விரல் விட்டு எண்ணக் கூடிய வகையில் மிகச் சொற்ப அளவில் தான் இருக்கிறார்கள். பழைய சினிமாக்களை எடுத்துக் கொண்டால் எம்.எஸ். சுப்புலட்சுமி, கே.பி. சுந்தராம்பாள் என நமக்குத் தெரிந்தவர்கள் இவர்களே. தற்போதைய காலத்தில் தாமரை என வெகுசிலரே இந்த லிஸ்ட்டில் இருக்கின்றனர். ஆனால் ஒரே ஒரு பாடல் எழுதி அந்தப் பாடலும் சூப்பர் ஹிட் ஆகி இன்றுவரை திருமண வீடுகளில் ஒலிக்கும் காலத்தால் அழியாத பாடலை எழுதிய பெண்கவிஞர் தான் ரோஷனாரா பேகம்.
இவர் எழுதிய பாடல்தான் எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற குடியிருந்த கோவில் திரைப்படத்தில் இடம்பெற்ற குங்குமப்பொட்டின் மங்களம்.. நெஞ்சமிரண்டின் சங்கமம்.. என்ற பாடல். கோவையைச் சேர்ந்த ரோஷனாரா பேகம் இளம் வயதிலேயே கவிதை புனையும் ஆற்றல் பெற்றிருந்தார். இவருடைய தந்தை ஷேக் முஸ்தபாவும், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனும் நண்பர்கள். எம்.எஸ்.வி. கோவை வரும்போதெல்லாம் ஷேக் முஸ்தபா வீட்டிற்கு வருவது வழக்கம்.
அப்படி வரும் போது ரோஷனாரா பேகத்தின் கவிதை ஞானத்தினை அறிந்த எம்.எஸ்.விஸ்வநாதன் தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணியிடம் ரோஷனாரா பேகத்திற்கு பாடல் எழுத வாய்ப்புத் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அப்போது தான் சைனா டவுன் என்ற இந்திப் படத்தின் தமிழ் ரீமேக்கான குடியிருந்த கோயில் திரைப்படத்தில் ரோஷனாரா பேகத்திற்கு பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்தது.
இளையராஜாவைத் தொடர்ந்து இயக்குனர் இமயத்தை சந்தித்த லப்பர் பந்து குழு! கலக்குங்க ப்ரோஸ்!
இயக்குநர் காட்சியைக் கூற, எம்.எஸ்.வி. டியூன் போட உடனே ரோஷனாரா பேகம் குங்குமப் பொட்டின் மங்களம் நெஞ்சமிரண்டின் சங்கமம் என்று பல்லவியை எழுதியிருக்கிறார். இதனைப் பார்த்த அனைவருக்கும் மகிழ்ச்சி. ஏனெனில் குடியிருந்த கோயில் திரைப்படத்திற்கு முதலில் வைத்த பெயர் சங்கமம். ஆனால் இந்த விபரம் அறியாத ரோஷனாரா பேகம் இந்தப் பல்லவியை எழுத அனைவருக்கும் ஆச்சர்யம் கலந்த மகிழ்ச்சி.
இந்தப் பாடல் எம்.ஜி.ஆர்- ஜெயலலிதாவின் சூப்பர் ஹிட் பாடல்களில் டாப் 10-ல் இடம்பெற்றது. மேலும் எந்த திருமண வீடாக இருந்தாலும் இந்தப் பாடல் இடம்பெறாமல் இருந்தது கிடையாது. தமிழ் சினிமாவில் ஓர் அற்புத பெண் கவிஞர் கிடைத்து விட்டார் என்ற சூழலில் ஆனால் முதல் பாடலே அவரின் இறுதிப் பாடலாக அமைந்தது.