கருணாநிதி வசனம் எழுத ஏ.எஸ்.ஏ சாமி இயக்கத்தில் எம்.ஜி.ஆர், பத்மினி, நம்பியார் உள்ளிட்டோர் நடத்த திரைப்படம் தான் அரசியளங்குமரி. இப்படத்திற்கு ஜி.ராமநாதன் இசையில் பாடல்கள் அனைத்தும் மக்களிடையே ஈர்ப்பை பெற்றிருக்கும். எம்.ஜி.ஆர் படம் என்றாலே சண்டை காட்சிக்கு பஞ்சம் இருக்காது. சினிமாக்கு வரும் முன்பே சண்டைக்கலையில் அனைத்தையும் கற்றுத்தேர்ந்த வித்தகர் என்று சொல்லலாம்.
எவ்வளவு பெரிய சண்டைக் காட்சியாக இருந்தாலும் சரி டூப் இல்லாமல் அவரே சண்டையிட்டு அசத்துவார். அப்படி அரசிளங்குமரி படத்தில் நம்பியாருக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே ஆக்ரோஷமான கத்தி சண்டைக் காட்சி ஒன்று படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தது.
அப்பொழுது நம்பியாரின் கத்தி எம்.ஜி.ஆரின் கண்ணின் புருவத்தின் மேல் பட்டு கிழித்து விட்டது. இதனால் படப்பிடிப்பில் தளத்தில் ரத்தம் கொட்டி வழிந்தது. எம்.ஜி.ஆர் வெட்டுப்பட்ட இடத்தை துணியை வைத்து பிடித்துக் கொண்டார். இன்னும் சிறிது அங்குலம் கீழே இறங்கி பட்டிருந்தால் எம்.ஜி.ஆரின் கண்ணே பறிபோயிருக்கும்.
உதவியாளர் ஒருவர் நம்பியரை பார்த்து, “என்னன்னே பார்த்து சண்டை போட கூடாதா இப்படி பண்ணிட்டீங்களே” என்று கேட்டார். உடனே படப்பிடிப்பு தளத்தில் உள்ள அனைவரும் நம்பியாரை ஒரு குற்றவாளி போல் பார்க்கத் தொடங்கினர். இதை நன்றாக கவனித்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர் விஷயம் மேலும் பெரிதாகமல் இருக்க, “நம்பியாருக்கு என் மீது கோபம் இல்லை அந்த கத்திக்கு தான் என் மீது கோபம்” என்று கூறி படப்பிடிப்பு தளத்தை அமைதி அடைய செய்தார்.
அப்படத்தில் எம்.ஜி.ஆரின் படத்தை உற்று நோக்கி பார்த்தால் கண்ணில் அந்த தழும்பு தெளிவாக தெரியும். தெரிந்தோ தெரியாமலோ தனக்கு துன்பம் கொடுத்த எவரையும் தெரிந்து கூட தண்டிப்பதில்லை எம்.ஜி.ஆர். இது போன்ற சம்பவங்களால் எம்.ஜி.ஆருக்கு நிகர் எம்.ஜி.ஆரே என்று நிரூபணம் ஆகிறது.