Meiyzhagan Review: தமிழ் சினிமாவில் இப்படி ஒரு படத்தைப் பார்த்து எத்தனை நாளாச்சு என்று சில படங்கள் நம்மை உணர்வுப் பூர்வமாக நம்மை கவர்ந்திழுக்கும். அப்படியான ஒரு படம் தான் மெய்யழகன். இது கார்த்தியா..? இது அர்விந்தசாமியா என்று வியக்கும் அளவிற்கு நடிப்பில் அப்படி ஒரு மென்மை, பக்குவம். கொஞ்சம் பிசிறு தட்டினாலும் கமர்ஷியல் பாதையில் சென்று விடும். ஆனால் அதற்கு துளியளவும் இடம் கொடுக்காமல் இயக்குநர் பிரேம்குமார்.
96 படத்திற்குப் பின் 6 வருடங்கள் கழித்து இயக்கியுள்ள படம். இத்தனை கால இடைவெளிக்கும் மொத்தமாயச் சேர்த்து அதை மெய்யழகனில் கொட்டித் தீர்த்துவிட்டார். அப்படி ஒரு எழுத்து. 96 படத்தில் பள்ளிப் பருவ காதலை அழகாய்ச் சொல்லியவர் இதில் உறவுகளின் உன்னதத்தைக் கூறியிருக்கிறார். சென்னையிலிருக்கும் அருண்மொழி வர்மன் (அர்விந்த்சாமி) 20 ஆண்டுகளுக்கு முன் உறவுகளால் ஏற்பட்ட மனக் கசப்பால் ஊருக்கே வராமல் இருக்கிறார். இந்நிலையில் முக்கியமான உறவினர் திருமணத்திற்கு அரை மனதுடன் சொந்த ஊரான தஞ்சை நீடாமங்கலம் வருகிறார்.
அங்கு வந்ததிலிருந்து இவரை ‘அத்தான்‘ என அழைக்கும் முதல் குரலிலேயே கார்த்தி ஸ்கோர் செய்து விடுகிறார். அர்விந்த்சாமியை விழுந்து விழுந்து கவனித்து, உரிமையுடன் அழைக்கும் அவர் யார் அவருக்கும் இவருக்கும் என்ன உறவு..? சொந்த ஊரை விட்டுச் செல்ல என்ன காரணம்.. இறுதியில் மீண்டும் உறவுகளுடன் இணைந்தாரா என்பதை ஒரு கவிதையாய் சொல்லியிருக்கிறார் பிரேம்குமார்.
அன்பே சிவம் படத்தில் எப்படி கமல்ஹாசன்-மாதவன் உறவு இருக்குமோ அதேபோல் மெய்யழகனிலும் அர்விந்த்சாமி-கார்த்தி உறவும் படம் முழுக்க நீள்கிறது. 96 படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு, எடிட்டிங் என அனைத்தும் கச்சிதம். சோழநாட்டின் கலாச்சாரத்தினை அப்படியே பிரதிபலித்திருக்கிறார்கள்.
படத்தில் இவர்களுடன் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கமர்ஷியலில் கலக்கும் கார்த்திக்கு இந்தப் படம் லைப் ஃடைம் நினைவாக இருக்கும். அர்விந்த்சாமியும் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் எதார்த்த கதைக்களம் கொண்டு எடுக்கப்பட்ட மெய்யழகன் அவருக்கும் வாழ்நாள் பொக்கிஷ படமாக இருக்கும்.
அன்பே பிரதானம் என்பதை படம் முழுக்க சொல்லியிருக்கிறார் இயக்குநர் பிரேம்குமார். அதை அவர் சொல்லியவிதம் அழகு. படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூர்யா கூறியது போல் இது வணிகப் படமாக இல்லாவிட்டாலும் நிறைவான ஒரு படத்தினைக் கொடுத்த திருப்தி அடைந்திருப்பதாகக் கூறினார். 96 படம் போல் மெய்யழகனும் இன்னொரு அன்பே சிவம் படமாகக் கொண்டாடப்படும் என்பதில் சந்தேகமேயில்லை.
மெய்யழகனுக்கு நம் மதிப்பெண்கள் : 8/10