இந்த ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் பலரது மனதிற்கும் நெருக்கமாக அமைந்திருந்ததாக கார்த்தி – அரவிந்த் சாமி நடிப்பில் வெளியான மெய்யழகன் படத்தை அனைவரும் குறிப்பிட்டு வருகின்றனர். மனித உறவுகளை மிக ஆழமாக அதே நேரத்தில் பார்ப்பவர்கள் மத்தியில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் இதனை பிரேம்குமார் காட்சிப்படுத்தி இருந்தார்.
96 படத்தில் முன்னாள் காதல் ஜோடியின் வலியை மிகச் சிறப்பாக பதிவு செய்திருந்த இயக்குனர் பிரேம்குமார் மெய்யழகன் திரைப்படத்திலும் குடும்பம், உறவினர்கள் தொடர்பான பந்தத்தை பற்றி மிக அழகாக பேசி இருந்தார். அப்படி ஒரு சூழலில் இதில் வெள்ளந்தியாக மெய்யழகன் என்ற கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்திருந்த நிலையில் அது யாரை பார்த்து இன்ஸ்பிரேஷன் ஆகி எழுதியது என்பது பற்றி படத்தின் இயக்குனர் பிரேம்குமார் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
“கார்த்தி கதாபாத்திரம் இரண்டு பேரிடமிருந்து இன்ஸ்பயர் ஆகி நான் எழுதியது. ஒன்று அசுரவதம், சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது திரைப்படங்களை இயக்கிய மருது பாண்டியன். அவர் என்னுடன் திரைப்படக் கல்லூரியில் இணைந்து படித்திருந்தார். அவர் ரொம்ப ரொம்ப வெள்ளந்தியான மனிதர். ரொம்ப நல்ல மனிதரும் கூட. அவருக்கு எதையுமே மறைக்க தெரியாது. ஆனால் எளிதாக ஏமாற்றியும் விடலாம்.
அதிக புத்தகங்கள் படிக்கும் அவர் நுட்பமாக ஒவ்வொரு விஷயத்தையும் தெரிந்து கொள்பவர். ஆனால் ரொம்ப ரொம்ப வெள்ளந்தியான மனிதர் மருது பாண்டியன். அவர்தான் மெய்யழகன் கார்த்தி கதாபாத்திரத்தில் ரியல் இன்ஸ்பிரேஷன். இன்னொருவர் என் வீட்டிற்கு வரும் பிளம்பர் முத்து என்ற நபர். அவர் எந்த அளவுக்கு வெள்ளந்தி என்றால் வீட்டிற்கு வந்தால் பேசிக் கொண்டே இருப்பார்.
வீட்டிற்கு நடுவே அமர்ந்து கொண்டு என்னையும் எனது மகளையும், வீட்டில் வேலை பார்க்கிறவர்கள் என அனைவரையும் வேலை வாங்கி விடுவார். நான் ஏதாவது முக்கியமான ஒரு வீடியோ கால் மீட்டிங்கில் இருப்பேன். அங்கே கோடிக்கணக்கில் முதலீடு செய்பவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது இந்த பிளம்பர் ஏதாவது சிறிய வேலைக்காக என் வீட்டிற்கு வருவார்.
நான் மீட்டிங்கில் இருக்கும் போது வீடியோவில் எட்டிப் பார்த்துவிட்டு ஒரு நிமிடம் என அவர்களிடம் கூறி பின்னர் என்னிடம் வேலை முடிந்துவிட்டது என வேடிக்கையாக கூறிவிட்டு செல்வார். இதைப் பார்த்து வீடியோ கால் மீட்டிங்கில் இருப்பவர்கள் சிரிக்க தொடங்கி விடுவார்கள். அந்த அளவுக்கு வெள்ளந்தியான அந்த பிளம்பர் அனைத்தையுமே பர்சனலாக தான் பார்ப்பார். இந்த இரண்டு கேரக்டர்கள் தான் மெய்யழகன் கேரக்டரின் இன்ஸ்பிரேஷன்” என இயக்குனர் பிரேம் குமார் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.