மறைந்த இயக்குநர் ராசு மதுரவன் படங்கள் என்றாலே ரத்த உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து காட்சிக்கு காட்சி நம்மை உணர்ச்சிவசப் படுத்துவார். பூமகள் ஊர்வலம், பாண்டி போன்ற படங்களில் தாய்ப் பாசத்தையும், மாயாண்டி குடும்பத்தாரில் சகோதரர்கள் பாசத்தையும், கோரிப்பாளையத்தில் நண்பர்கள் பாசத்தையும், முத்துக்கு முத்தாக படத்தில் பெற்றோர் பாசத்தையும் கண்முன் கொண்டு வந்து நம்மை அழ வைப்பதில் கைதேர்ந்த இயக்குநர்.
இன்றும் இந்தப் படங்களை டிவியில் பார்க்கும் போது தினசரி நம் வீட்டில் நடக்கும் சம்பவங்களை போன்றே இருக்கும். மனித உணர்வுகளை திரை வடிவில் கொண்டு வந்த படைப்பாளி அவர்.
கடந்த 2009-ல் அவர் இயக்கிய மாயாண்டி குடும்பத்தார் படம் ஆரம்பத்தில் சரியாகப் போகாவிட்டாலும் படத்தின் நேர்மறையான விமர்சனங்களால் ஹிட் ஆனது. சபேஷ்-முரளியின் இசையில் பாடல்கள் கிராமத்து ஒலிப்பெருக்கிகளிலும், பேருந்துகளிலும் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன. தமிழ் சினிமாவில் முதன் முறையாக 10 இயக்குநர்களை ஒரே படத்தில் நடிக்க வைத்த பெருமையும் பெற்றது. மணிவண்ணன், பொன்வண்ணன், சீமான், ஜெகன்னாத், தருண் கோபி, ரவி மரியா, ஜி. எம். குமார், நந்தா பெரியசாமி, சிங்கம்புலி, ராஜ்கபூர் போன்ற இயக்குநர்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.
சகோதர பாசத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் தற்போது இதன் அடுத்த பாகம் தயாராகி வருகிறது. மாயாண்டி குடும்பத்தார் முதல் பாகத்தைப் போலவே சிறந்த கதையம்சத்துடன், எமோஷனல் படமாக உருவாகும் இதை விஜய் நடித்த புதிய கீதை, சேரன் நடித்த ராமன் தேடிய சீதை ஆகிய படங்களை இயக்கிய கே.பி. ஜெகன் இயக்குகிறார்.
முதல் பாகத்தில் நடித்த பலரும் இரண்டாம் பாகத்தில் தொடர்வார்கள் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக சீமானும் இப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இப்படத்தினைத் தயாரித்த யுனைட்டட் ஆர்ட்ஸ் நிறுவனவே இரண்டாம் பாகத்தையும் தயாரிக்கிறது.
அழகாக கிராமத்துக் கதைகளை சொல்வதில் பாரதிராஜாவுக்குப் பிறகு கைதேர்ந்தவரான ராசுமதுரவனின் இடத்தை கே.பி.ஜெகன் மாயாண்டி குடும்பத்தார்-2 மூலம் நிறைவேற்றுவராக என்ற எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.