மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகிய ‘பைசன்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்.
இந்த படத்தின் நாயகன் துருவ், கபடியை மட்டுமே தனது வாழ்க்கையாக நினைக்கிறார். அவரது விருப்பத்தை அறிந்த உடற்பயிற்சி ஆசிரியர் கபடி அணிக்குள் அவரை கொண்டு வர அப்போது ஒரு எதிர்பாராத கொலை நிகழ்கிறது. துருவ் தந்தை பசுபதி தன் மகனுக்கு கபடி எல்லாம் வேண்டாம் என்று தடை சொல்ல, துருவ்வின் அக்கா ரஜிஷாவோ எப்படியாவது தனது தம்பி ஒரு கபடி வீரனாக வேண்டும் என்று எண்ணுகிறார். சொந்த குடும்பமே ஒரு பக்கம் தடையாக இருக்கும் நிலையில் ஜாதி கலவரங்கள் மற்றும் பல இடையூறுகளையும் தாண்டி தென் மாவட்டத்திலிருந்து ஒரு கபடியின் குரலாக துருவ் மாறினாரா என்பதை இந்த படத்தின் கதை.
கபடி விளையாட்டிற்காக அர்ஜுனா விருது வென்ற பி கணேசன் வாழ்க்கையில் இருந்து சில பகுதிகளை மட்டும் எடுத்து கொண்டு சினிமாவுக்காக சில கேரக்டர்களை சேர்த்து உருவாக்கி இருக்கும் படம் தான் ‘பைசன்’. கடந்த 1990களில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நடந்த ஜாதி கலவரங்கள், தீண்டாமை, கொடுமை ஆகியவற்றை தோலுரித்து காட்டும் வகையில் படத்தில் பல காட்சிகள் உள்ளன. தென்மாவட்டங்களில் தற்போது ஜாதி படுகொலைகள் குறைந்துவிட்ட நிலையில் இன்றைய காலத்தில் இந்த படத்தை எடுக்க முடியாது என்பதால் 1990களின் காலத்தில் இந்த படத்தை மாரி செல்வராஜ் செல்வராஜ் எடுத்திருக்கிறார். மேலும் முதல்முறையாக தங்கள் பக்கம் உள்ள தவறையும் அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார்.
இதில் உள்ள கேரக்டர்கள் ஒவ்வொன்றும் மனதில் இருக்கும் வகையில் உள்ளது. குறிப்பாக அமீர் பேசும் வசனங்கள் பார்வையாளர்களை கைத்தட்டலை பெறுகிறது. ஒரு கிடாயை பேருந்தில் அழைத்துச் செல்லும்போது ஏற்படும் பிரச்சனைகள் அதனால் ஏற்படும் ஜாதிய தீண்டாமைகள் பார்க்கவே பதற்றம் அடைய வைக்கிறது.
இந்த படத்தில் மிகவும் சிறப்பாக ஒரு கபடி வீரராகவே துருவ் மாறி உள்ளார். இரண்டு ஆண்டுகளாக கபடி பயிற்சி எடுத்து தனது முழு உழைப்பையும் இந்த ஒரே படத்திற்காக போட்டுள்ளார். துருவுக்கு அடுத்ததாக மனதில் இருப்பவர் பசுபதி தான். அதேபோல் ரஜிஷாவுக்கு சிறப்பான கேரக்டர். தன் தம்பியை எப்படியாவது கபடி வீரனாக்க வேண்டும் என்று அவர் முயற்சிப்பது அவரது நடிப்பில் சூப்பராக உள்ளது. இசை மற்றும் ஒளிப்பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது. கபடி ஆட்டங்களை படம் பிடித்த விதம் பல ட்ரோன் ஷாட்டுகள் மற்றும் ஜாதி கலவர காட்சிகள் மிரள வைக்கின்றன.
ஜாதியும் பகையும் அதிகமாக இருக்கும் ஒரு ஊரில் காதல், குடும்பம், லட்சியத்துடன் பல தடைகளை தாண்டி எப்படி ஒரு இளைஞன் வெற்றி பெறுகிறான் என்பதை ‘பைசன்’ திரைப்படம் பார்வையாளர்களை மனதில் பதிய வைக்கிறது. மொத்தத்தில் இந்த ஆண்டின் சிறப்பான படங்களில் ஒன்றாக ‘பைசன்’ உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
