தமிழ் சினிமாவில் இன்று ஏராளமான கலைஞர்கள் இருந்தாலும் அவர்களையெல்லாம் தாண்டி மிக முக்கியமான ஒரு படைப்பாளி தான் பாலு மகேந்திரா. இவர் சிறந்த இயக்குனர் என்பதை தாண்டி ஒளிப்பதிவாளராகவும் கவனம் ஈர்த்துள்ள சூழலில், தேசிய விருது தொடங்கி பல விருதையும் தனது படைப்புகள் மூலம் சொந்தமாக்கி உள்ளார். சினிமாவையே முற்றிலும் வேறு ஒரு பரிமாணத்தில் தனது கேமரா லென்ஸ் மூலம் காட்டி கவனம் ஈர்த்த பாலு மகேந்திரா, கடந்த 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதியன்று உடல்நலக் குறைவால் 74 வயதில் காலமானார்.
இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் புதிதாக தமிழ் சினிமாவில் சாதிக்க துடிப்பவர்களுக்கு பாலு மகேந்திராவின் படைப்புகள் என்றென்றைக்குமே ஒரு சிறந்த புத்தகமாக தான் இருக்கும். அப்படி ஒரு சூழலில் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனர்களாக இருந்து தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இடத்தை பிடித்த பல இயக்குனர்கள் இருந்து வருகின்றனர். அந்த வரிசையில் பாலா, வெற்றிமாறன், ராம், அமீர், சசிகுமார் என பலரை சொல்லிக் கொண்டே போகலாம்.
5 ரூபா நாணயம்
இவர்கள் அனைவருமே ஏதாவது ஒரு விதத்தில் பாலு மகேந்திராவின் தாக்கத்தை தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஏற்படுத்தி வரும் சூழலில் கதை சொல்லும் விதத்திலும் தனித்திறன் பெற்று விளங்கி வருகிறார்கள். அப்படி ஒரு சூழலில் பாலு மகேந்திராவின் கடைசி நாளில் இயக்குனர் பாலா செய்த ஒரு சம்பவம் பற்றி சக இயக்குனர் மாரி செல்வராஜ் சில கருத்துக்களை ஒரு நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அப்போது பாலாவை நோக்கி பேசும் மாரி செல்வராஜ், “பாலு மகேந்திரா சாரோட கடைசி நாள் நானும் உங்களுடன் தான் அப்போது இருந்தேன். நான் இயக்குனர் ராமனிடம் அசிஸ்டன்ட் இயக்குனராக அந்த சமயத்தில் பணிபுரிந்து வந்தேன். அப்போது நானும், நீங்களும், ராம் சாரும் சேர்ந்து டீ கடைக்கு சென்றோம்.
பாலு மகேந்திராவின் கடைசி நாள்..
நீங்கள் அப்போது பதற்றமாக இருந்தீர்கள். நாம் வடபழனி ரோட்டை கடந்து சென்ற போது பாலு மகேந்திரா சாருக்கு என்ன ஆகி விடுமோ என்ற ஒரு பயமும் அனைவரிடமும் இருந்தது. அந்த சமயத்தில் டீக்கடைக்கு சென்று டீ குடித்துவிட்டு பின்னர் சில்லறை இல்லை என ஐந்து ரூபாய் காயினை நீங்கள் கொடுத்தீர்கள் அதனை நான் டீக்கடைக்காரரிடம் கொடுக்காமல் நாளைக்கு கொடுக்கிறேன் என என்னிடமே வைத்து விட்டேன்.
அதுதான் நான் உங்கள் கையில் இருந்து வாங்கிய முதல் நாணயம் இன்று வரையிலும் நான் அதை பத்திரமாக வைத்துள்ளேன். அன்று இரவு தான் ஒரு ஒரு இயக்குனரிடம் எப்படி இருக்க வேண்டும் என்பதை ஒரு இயக்குனராக நாம் புரிந்து கொண்டேன்” என மாரி செல்வராஜ் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார்.