இன்றெல்லாம் கலைத்துறையில் பிரபலமாக இருக்கும் பலரும் கூட ஒரு சில திரைப்படங்களில் நடித்து விட்டாலே எதோ பெரிய பிரபலமாக உயர்ந்த அளவுக்கு பில்டப் செய்ததுடன் ஒருவித கர்வமும் அவர்கள் மத்தியில் உருவாகி விடுகிறது. சம்பளத்தை அதிகப்படுத்துவது, ரசிகர்கள் மத்தியில் சற்று வித்தியாசத்தை காட்டுவது என அவர்கள் ரேஞ்சுக்கு மாற்றிக் கொண்டு நான் தான் இங்கே என்பது போன்றொரு ஆணவமும் அவர்கள் தலையில் ஏறி விடுகிறது.
ஆனால், அதே வேளையில் இன்னொரு பக்கம் சினிமாவில் கால் பதித்து பல ஆண்டுகள் ஆனாலும் முதல் படத்தில் எப்படி இருந்தார்களோ அதே பணிவடன் இன்று வரை இருந்து வரும் கலைஞர்களும் பலர் உள்ளனர். ஷூட்டிங் ஸ்பாட்டில் அனைவருடனும் ஒரே போன்று பழகுவது, எந்தவித கர்வமும் இல்லமால் மிக எளிதாக இருப்பது என அப்படியே குணம் மாறாமல் இருப்பவர்களும் இங்கு ஏராளம்.
ரஜினிகாந்த், ஏ. ஆர். ரஹ்மான் என பலரையும் எளிமை உள்ளிட்ட பல விஷயங்களுக்கு சொல்லிக் கொண்டே போகலாம். அந்த வகையில், முக்கியமான ஒரு நடிகர் தான் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி. தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நிறைய திரைப்படங்கள் நடித்துள்ள மம்மூட்டி, தேசிய விருதுகளையும் வென்றுள்ளதுடன் நடிப்பில் ஒவ்வொரு படத்திலும் வேறொரு பரிமாணம் காட்டி வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளில் கூட மம்மூட்டி நடித்த ஒவ்வொரு படத்திலும் கதைக்களம் வேறாக இருந்ததுடன் அவரது கதாபாத்திரமும் சவாலானதாக அமைந்திருந்தது. அனைத்திலும் ஸ்கோர் செய்து பட்டையை கிளப்பிய மம்மூட்டி, இந்த காலத்து இளைஞர்களுக்கும் பிடித்தமான ஹீரோவாக இருந்து வருகிறார்.
அப்படி ஒரு சூழலில், மம்மூட்டியை குறித்து பிரபல இயக்குனர் ஆர். கே. செல்வமணி தெரிவித்த கருத்து, பலரையும் நெகிழ வைத்து வருகிறது. மம்மூட்டி நடித்து தமிழில் வெளியான மக்களாட்சி மற்றும் அரசியல் ஆகிய திரைப்படங்களை ஆர். கே. செல்வமணி தான் இயக்கியிருந்தார். இதனிடையே, மம்மூட்டி பற்றி ஆர். கே. செல்வமணி பேசுகையில், “ஒரு சேர் எடுத்து போட்டால் கூட அவருக்கு பிடிக்காது. அவரே எடுத்து போடுவார். சாப்பாடும் அவரே தான் எடுத்து வருவார்.
எனக்கு தெரிந்து போட்ட காஸ்ட்யூமை திருப்பி கொடுத்த ஒரே நடிகர் மம்மூட்டி தான். மேக்கப் மேன், டிரைவர் என அனைவருக்கும் அவரே சம்பளம் கொடுத்து விடுவார். தயாரிப்பாளருக்கு எந்த கஷ்டமும் கொடுக்கமாட்டார். ‘அரசியல்’ படத்திற்காக நான் 25 லட்ச ரூபாய் மம்மூட்டிக்கு சம்பளம் கொடுத்தேன். அடுத்து ஒரு மலையாள படத்தில் நடித்ததற்காக 2 லட்ச ரூபாய் தான் சம்பளம் வாங்கினார்.
நான் இது பற்றி வியப்புடன் அவரிடம் கேட்ட போது, ‘அந்த படம் அவ்வளவு தான். அது கமர்ஷியலாக ஓடாது. அது ஒரு கலை ரீதியிலான படம். 25 நாட்கள் தான் தேதி கொடுத்திருக்கிறேன்’ என கூறினார். ஒரு கலைஞர் எப்படி இருக்கிறார் என பாருங்கள்” என ஆர். கே. செல்வமணி வியப்புடன் கூறி உள்ளார்.