மலையாள திரையுலகம் கண்ட மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர் திலகன். வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம், முன்னணி நடிகர் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் அப்படியே வாழும் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்த கூடியவர் திலகன். இது போக சில படங்களில் காமெடி நடிகராகவும் அவர் பட்டையை கிளப்பி உள்ளார்.
திலகனுக்கு சிறு வயதிலேயே நடிப்பின் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. ஆரம்பத்தில் அவர் சின்ன சின்ன கேரக்டர்களில் நடிக்க ஆரம்பித்த நிலையில் 1979 ஆம் ஆண்டு உள்கடல் என்ற திரைப்படத்தின் மூலம் தான் அவர் வெளியே தெரிய ஆரம்பித்தார்.
1981 ஆம் ஆண்டு யவனிகா என்ற திரைப்படத்திற்காக மாநில விருதை பெற்றவுடன் அவர் மலையாள திரையுலகில் பிரபலமானார். எந்த கேரக்டரை கொடுத்தாலும் அந்த கேரக்டராகவே மாறி விடுவதில் திலகனை விட ஒரு நடிகரை பார்க்க முடியாது. இவரது கிண்டலுக்கு தப்பாத அரசியல்வாதிகளே இல்லை என்று சொல்லலாம் என்ற அளவுக்கு பல திரைப்படங்களில் அரசியல்வாதியாக நடித்துள்ளார்.
தமிழில் விஜயகாந்த் நடித்த சத்ரியன் என்ற திரைப்படத்தில் தான் அவர் அறிமுகமானார். மிக சிறந்த நடிகனாக விஜயகாந்துக்கே டஃப் கொடுக்கும் வகையில் அவரது நடிப்பு அபாரமாக இருந்தது. முன்னதாக, விஜயகாந்தே படப்பிடிப்பின் போது அவரை பலமுறை பாராட்டி உள்ளதாகவும் கூறப்பட்டது
இதன் பிறகு அவர் தமிழிலும் பிரபலமானார். மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், உடன்பிறப்பு, கிளி பேச்சு கேட்கவா, கருப்பு வெள்ளை, ஆயுத பூஜை, மேட்டுக்குடி, அரவிந்தன், கள்ளழகர், பாலா உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்த அவர் சில படங்களில் டப்பிங் கலைஞராகவும் பணிபுரிந்துள்ளார்.
திரை உலகில் மட்டுமின்றி தொலைக்காட்சி தொடர்களிலும் அவர் நடித்துள்ளார். மலையாளத்தில் ஒளிபரப்பான ஒரு சில சீரியல்களில் அவர் நடிப்பு பிரமாதமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் திலகன் பிரபல மலையாள நடிகை சாந்தாவை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு அவர் தன்னுடன் நடித்த சரோஜம் என்பவரையும் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.
நடிகர் திலகன் கடந்த 2009 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதை பெற்றார். அதேபோல் ரிதுபேதம் என்ற திரைப்படத்திற்காக அவர் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி கேரள மாநில விருதுகளையும், பிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார்.
நடிகர் திலகன் கடந்த 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதி தனது 77வது வயதில் காலமானார். அவரது இறுதி சடங்கை மலையாள திரையுலகமே திரண்டு வந்து நடத்தியது. நடிகர் திலகன் கம்யூனிச கொள்கையை பின்பற்றியவர். கம்யூனிஸ்ட் கட்சியில் மிகவும் ஈடுபாடுடன் இருந்த திலகன் மறைந்த பிறகு அவரது உடலில் கம்யூனிஸ்ட் கொடி போர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மகன் ஷம்மி திலகன் தற்போது மலையாள சினிமாவில் நடிகராக உள்ளார்.