சினிமா உலகிலும், இலக்கிய உலகிலும் தனது பேனா முனையால் ஆயிரக்கணக்கான பாடல்களைக் கொடுத்து அதன் மூலம் இன்றளவு ரசிகர்களின் நெஞ்சங்களில் வாழ்பவர்தான் கவிஞர் வாலி. இளமைத் துள்ளலுடன், நவீன காலத்திற்கும் ஏற்றாற்போல் வாலியின் வரிகள் அமைந்திருக்கும். கண்ணதாசனுக்குப் பிறகு கவிஞர் என்றாலே அது வாலியைத்தான் குறிக்கும்.
எம்.ஜி.ஆர், சிவாஜி காலம் முதல் அனிருத் காலம் வரை அனைவருக்கும் பாடல்கள் எழுதியவர் என்ற சாதனையைப் படைத்தவர். எம்.ஜி.ஆருக்கும் கண்ணதாசனுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவ வாலியிடம் தனக்குப் பாடல்கள் எழுதுமாறு கூற, எம்.ஜி.ஆருக்குப் பல ஹிட் பாடல்களைக் கொடுத்திருக்கிறார் வாலி. இவ்வாறு சினிமா, இலக்கியம் என அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் அன்பைப் பெற்ற கவிஞர் வாலியை தயாரிப்பாளர் ஒருவர் கோபப்படுத்தியதால் அவரை அடிச்சு உதைச்சிடுவேன் என்று கோபமாய்ப் பேசிய சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது.
புஷ்பான்னா நேஷனல்ன்னு நினைச்சியா.. இண்டர் நேஷனல்.. தமிழில் பேசிய அல்லு அர்ஜுன்
கவிஞர் வாலி அப்போது மிக பிஸியாக இருந்த நேரம். அப்போது எம்.ஜி.ஆர்.நடித்த அன்னமிட்ட கை படத்திற்காகப் பாடல்கள் எழுத ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் சிவசாமி. இந்தப் படத்தின் ஷுட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம். அப்போது கவிஞர் வாலியின் மனைவி பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற நிர்பந்தம். எனவே வாலி பதட்டத்துடன் மருத்துவமனையில் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தார்.
அப்போது தயாரிப்பாளரிடமிருந்து போன் வந்திருக்கிறது. தயாரிப்பாளர் சிவசாமி. இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் உள்ளிட்ட எல்லோரும் இங்கு அமர்ந்திருக்கிறார்கள். எனவே நீங்கள் வந்து பாடல் எழுதிக் கொடுத்தால் இன்று பதிவு செய்து நாளை ஷுட்டிங் கிளம்பி விடலாம் என்று கூற, அதற்கு வாலி நிலைமையைச் சொல்லியிருக்கிறார். அப்போது தயாரிப்பாளர், நீங்களா ஆப்ரேஷன் பண்ணப் போறீங்க..? என்று சற்று கேலியாகக் கேட்க வாலிக்குக் கோபம் உச்சத்தில் ஏற்றி போனை கீழே வைடா.. அடிச்சு உதைச்சிடுவேன்.. என்று கோபத்துடன் கூறியிருக்கிறார்.
இந்த விவகாரம் எம்.ஜி.ஆர். கவனத்திற்குச் சென்றது. எம்.ஜி.ஆரும்., நிலைமையை உணர்ந்து ஷுட்டிங்கைத் தள்ளி வைத்திருக்கிறார். அதன்பின் வாலியின் மனைவிக்குப் பிரசவம் நடந்த பிறகு குழந்தையை நேரில் வந்து பார்த்து தங்க மோதிரம் அணிவித்து வாழ்த்திவிட்டுச் சென்றிருக்கிறார்.அப்போது வாலியிடம், “உங்கள் கோபம் நியாயமானது, யாராக இருந்தாலும் அந்த இடத்தில் கோபமடைந்திருப்பார்கள்” என்று கூற, அதன்பின் ஒரு சில நாட்கள் கழித்து பாடல்களை எழுதிக் கொடுத்திருக்கிறார் வாலி.