தமிழ் சினிமாவில் நவரசம் சொட்டச் சொட்ட பாடல்கள் இயற்றுவதில் கவிஞர் கண்ணதாசனுக்கு ஈடு இணை யாரும் இல்லை. கவிஞர் என்றாலே அது கண்ணதாசனைத் தான் குறிக்கும் அளவிற்கு தனது பாடல்களால் மானுட உலகத்திற்கு பல நல்ல கருத்துக்களை தனது பாடல்கள், கவிதைகள் மூலம் அளித்தவர். தத்துவப் பாடல்களுக்குப் பெரிதும் பெயர் பெற்ற கண்ணதாசனுக்கு பல பாடல்கள் பெயர் வாங்கிக் கொடுத்தாலும் இந்த பாடல் மட்டும் அன்றும், இன்றும், என்றென்றும் மனதில் விட்டு அகலாது. அந்தப் பாடல் தான் ஆறு மனேமே ஆறு.. அந்த ஆண்டவன் கட்டளை ஆறு.. என்ற பாடல்
1964-ல் பழம்பெரும் இயக்குநர் கே.சங்கர் இயக்கிய ஆண்டவன் கட்டளை படத்தில் இடம்பெற்ற இப்பாடலைக் கேட்டு மயங்காதவர் யாரும் கிடையாது. இந்தப் பாடலில் சிறந்தது நடிகர் திலகத்தின் நடிப்பா.. கண்ணதாசனின் வரிகளா.. விஸ்வநாதன் இராமமூர்த்தியின் இசையா, என்று ஒரு பட்டிமன்றமே நடத்தலாம். அந்த அளவிற்கு இந்தப் பாடல் எக்காலத்திலும் பொருந்தக் கூடிய பாடலாக அமைந்திருக்கும். அதிலும் டி.எம்.எஸ். குரலுக்கு சிவாஜியின் நடிப்பு சொல்லவே தேவையில்லை.
வழக்கமாக கவிஞர்கள் தங்களது பாடலில் ஏதேனும் ஒரு செய்யுளை உதாரணமாக ஒரு சில செய்யுளை எழுதுவது வழக்கம். ஆனால் கவிஞர் கண்ணதாசன் ஆறு மனமே ஆறு.. ஆண்டவன் கட்டளை ஆறு.. பாடலில் எட்டு திருக்குறளை மேற்கோள் காட்டியிருப்பார். அதில்,
தன்னெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும் (293)
ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி..
இன்பத்துள் இன்பம் விளையாதாதன் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன் (629)
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி
இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்கு தன்சொலால்
தான்கண் டனைத்து இவ்வுலகு (387)
உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உயிர்கள் உன்னை வணங்கும்
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மானப் பெரிது (124)
நிலை திரியும் போது பணிவு கொண்டால் உலகம் உன்னிடம் மயங்கும்
அழுக்காறு அவா வெகுளி இன்னாசொல் நான்கும்
இழுக்காறு இயன்றது அறம் (35)
ஆசை, கோபம் களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம்
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு (80)
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்விலை
செய்நன்றி கொன்ற மகற்கு (110)
கண்ணோட்ட மென்னும் கழிபெறும் காரிகை
உண்மையா னுண்டிவ் வுலகு (571)
இவ்வாறு எட்டுத் திருக்குறள்களைக் கொண்டு இந்தத் தத்துவப் பாடலை இயற்றியிருக்கிறார் கண்ணதாசன்.