ஒரே பாட்டில் நான்கு ஹீரோக்களுக்கு பின்னனி பாடிய டி.எம்.எஸ்.. எவர்கிரீன் சூப்பர் ஹிட் பாடல் உருவான விதம்!

By John A

Published:

தமிழ் சினிமாவில் முழு நீள காமெடி படங்கள் என்று 10 படங்களை எடுத்துக் கொண்டால் இந்தப் படம் தான் அதில் முதலில் இருக்கும். ஆம்.. 1967-ல் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் முத்துராமன், நாகேஷ், மேஜர் சுந்தர்ராஜன், ஸ்ரீ காந்த், டி.எஸ். பாலையா, சௌகார் ஜானகி, காஞ்சனா என பெரும் நட்சத்திரப் பட்டாளங்களுடன் வெளிவந்த திரைப்படம் தான் பாமா விஜயம்.

இந்தப் படத்தில் இடம்பெற்ற வரவு எட்டணா.. செலவு பத்தணா பாடலைக் கேட்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. எந்தக் காலத்திலும் சேமிப்பின் அவசியத்தை உணர்த்தும் சூப்பர் ஹிட் பாடலாக விளங்கும் இந்தப் பாடலைக் கூட நகைச்சுவையாகவே எடுத்திருப்பார்கள்.

கவிஞர் கண்ணதாசன் இப்படத்தின் பாடல்களை எழுதினார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பொதுவாக ஒருபாடலில் வேறு வேறு நடிகர்கள் நடிக்கும்படி இருந்தால் அதற்கு வேறு பாடகர்களைத் தான் பயன்படுத்துவது வழக்கம். இப்படி பெரிய பெரிய ஜாம்வான்களே தனித்தனியாகத்தான் பாடியிருக்கின்றனர்.

வைரமுத்து வரிகளில் திருப்தி ஆகாத இயக்குநர் விக்ரமன்..உருவான புதிய பாடலாசிரியர்..இதெல்லாம் இவரோட பாட்டுக்களா?

ஆனால் வரவு எட்டணா.. செலவு பத்தணா.. அதிகம் ரெண்டணா.. கடைசியில் துண்டனா.. துண்டனா.. பாடலில் வரும் ஆண் குரலை டி.எம். சௌந்தர்ராஜன் ஒருவரே பாடியிருப்பார். இதில் என்ன ஆச்சர்யம் என்கிறீர்களா? இப்பாடலில் நாகேஷ், மேஜர் சுந்தர்ராஜன், முத்துராமன், ஸ்ரீ காந்த் ஆகியோர் பாடுவதாக அமைந்திருக்கும். ஆனால் இவர்கள் அனைவருக்கும் சேர்த்து டி.எம்.சௌந்தர்ராஜன் ஒருவரே பின்னனி குரல் கொடுத்திருப்பார்.

தமிழ்சினிமாவில் எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகிய இருபெரும் சூப்பர் ஸ்டார்களின் பாடல்களில் அவர்களின் குரலாகவே திகழ்ந்த டி.எம்.சௌந்தர்ராஜன் பல்வேறு தொணிகளில் வித்தியாசமாகப் பாடுவதிலும் வல்லமை படைத்தவர்.

அந்த வகையில் இந்தப் பாடலையும் நான்கு பேருக்குமாகச் சேர்த்து இவர் ஒருவரே பாடியிருப்பது ஆச்சர்யம்தான். இன்றைக்கு இருக்கும் எத்தனையோ தொழில்நுட்பங்களில் இறந்தவர்களின் குரலில் கூட பாடல்களைப் பதிவு செய்கின்றனர். ஆனால் அப்போது எந்தத் தொழில்நுட்பங்களும் வளராத காலகட்டத்தில் குரலை மாற்றிப் பாடி அசத்தியிருக்கிறார் டி.எம்.எஸ்.