தமிழ் சினிமாவில் சில கலைஞர்கள் திரைக்கதை, வசனம், இயக்கம், பாடல்கள் என அனைத்துத் துறையிலும் கலக்குவார்கள். அப்படியான ஒரு வரம் பெற்ற மகா கலைஞர் தான் கொத்தமங்கலம் சுப்பு. இவரைப் பற்றி அறியாத 2K கிட்ஸ்களுக்கு விடை கொடுப்பது தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் தான். ஆம் என்றென்றும் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற காவியமான தில்லானா மோகனாம்பாள் கதை இவருடையதே. இத்திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதினைப் பெற்றது.
சுப்ரமணியன் என்ற இயற்பெயர் கொண்ட கொத்தமங்கலம் சுப்பு, புதுக்கோட்டை ஆவுடையார் கோவில் அருகில் உள்ள சிறிய ஊரில் பிறந்தார். சிறிய வயதிலேயே பாடல், நாடகம் என்று சுற்றித் திரிந்தவரை பொறுப்பு வர வேண்டும் என்ற காரணத்தினால் மீனாட்சி என்பவரைத் திருமணம் செய்து வைத்தனர். பின்னர் அவர்கள் கொத்தமங்கலம் என்ற ஊருக்குக் குடி பெயர்ந்தனர். அங்கேயே வாழ்ந்ததால் அவர் பெயர் கொத்தமங்கலம் சுப்பு என்றாயிற்று.
தனுஷ் 55 இயக்கப் போகும் அமரன் பட இயக்குநர்.. வெளியான சூப்பர் அப்டேட்.. குஷியில் ரசிகர்கள்..
வில்லுப்பாட்டுக் கலைஞர், கதாசிரியர், நாடகம், சிறுகதை, பத்திரிக்கையாளர் எனப் பன்முகம் கொண்ட சுப்பு காந்தி மகான் கதை என்ற பெயரில் கதைப் பாடல் இயற்றி அதனை வில்லுப்பாடலாக ஒவ்வொரு ஊரிலும் அரங்கேற்றம் செய்தார். இவர் ஒவ்வொரு முறையும் காந்தி இறக்கும் காட்சியைக் கூறும் போது தானாகவே அழுது விடுவாராம்.
இதனைக் கவனித்த பத்திரிக்கையாளர் ஒருவர், அதெப்படி எத்தனைமுறை காந்தி வரலாற்றினைக் கூறினாலும் இறுதியில் அழுது விடுகிறீர்களே என்று கேட்க, அதற்கு கொத்தமங்கலம் சுப்பு, அதன் ரகசியம் ஒன்னுமில்ல. காந்தி மகான் கதையை புத்தகமாக எழுதி விற்றேன். ஆனால் அவை சரியாக விற்காமல் ஆயிரக்கணக்கில் வீட்டில் குவிஞ்சு கிடக்கு.. அந்த நினைவு வந்தவுடன் கண்களில் தானாகக் கண்ணீர் வந்து விடும் என்று பதில் கூறினாராம்.
1935-ல் பட்டினத்தார் என்ற படத்தில் முதன் முதலில் நடிகராக வாழ்க்கையைத் துவங்கிய கொத்தமங்கலம் சுப்பு, 300 ரூபாய் சம்பளத்தில் எஸ்.எஸ்.வாசனிடம் வேலைக்குச் சேர்ந்து அங்கே தயாரான படங்களில் பணிபுரிந்தார். பின்னர் வஞ்சிக் கோட்டை வாலிபன் படத்திற்குப் பிறகு அங்கிருந்து விலகி படங்களைத் தயாரித்தார்.
இவரது இயக்கத்தில் வந்து பெரும் வெற்றி பெற்ற திரைப்படம்தான் ஔவையார். அதன்பின் தில்லானா மோகனாம்பாள் கதையை கலைமணி என்ற பெயரில் தொடர்கதையாக எழுதினார். இக்கதை அவருக்கு நிறைய புகழைப் பெற்றுக் கொடுத்தது. இவ்வாறு நடிப்பு, பாடல், கதை, வில்லுப்பாட்டு, எழுத்து என கலைத்துறையின் அனைத்திலும் சிறந்து விளங்கினார் கொத்தமங்கலம் சுப்பு.