இயக்குநர் சிகரம் பாலச்சந்தரின் நாடகத்தைத் தழுவி இரட்டை இயக்குநர்கள் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளிவந்து 100 நாட்ளைக் கடந்து ஓடி சாதனை படைத்த திரைப்படம் தான் சர்வர் சுந்தர். அதுவரை காமெடிக்கென்றே இருந்த நாகேஷை முதன் முதலாக கதையின் நாயகனாக வைத்து இயக்கப்பட்ட திரைப்படம்.
நவரசத்தையும் கொட்டி நாகேஷ் நடித்த இப்படம் பெரிய வெற்றி பெற்றது. படத்தினைத் தயாரித்தது சினிமாவின் பல்கலைக்கழகம் என்று வர்ணிக்கப்படும் ஏ.வி.எம்.ஸ்டுடியோ. நாகேஷுடன் முத்துராமன், கே.ஆர்.விஜயா, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இப்படத்திற்கு இசையமைத்தவர்கள் எம்.எஸ்.வி.-ராமமூரத்தி, பாடல்கள் கவிஞர் கண்ணதாசன் மற்றும் வாலி. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை வித்தியாசமாகப் படமாக்க விரும்பியிருக்கிறார் ஏ.வி.எம். குமரன். அதன்படி அவளுக்கென்ன அழகிய முகம்.. என்ற பாடலை எப்படிப் படமாக்குகிறார்கள். இசை எப்படி அமைக்கப்படுகிறது.
பாடல் பதிவு எவ்வாறு நடைபெறுகிறது என்பதை முதலில் காட்டிவிட்டு பின்னர் ஷுட்டிங் நடப்பது போல் காட்டி விடலாம். மக்களுக்கு திரைப்படம் உருவாக்குவது எப்படி சிரமமான பணி என்பதனை உணர்த்தும் வகையில் இருக்கும் என என ஏ.வி.எம் குமரன் இந்த யோசனை இயக்குநர்களிடம் தெரிவித்திருக்கிறார்.
அதற்கு கிருஷ்ணன் பஞ்சுவும் ஓகே சொல்ல இசையமைப்பாளர்களிடம் தெரிவிக்கப்பட்டது. முதலில் நடிப்பு வேண்டாம் என மறுத்திருக்கிறார் எம்.எஸ்.வி. அதன் பின் குமரன் வலியுறுத்திக் கேட்க ஓகே சொல்லியிருக்கிறார். மேலும் இப்பாடல் பதிவிற்கு கோட்-சூட் உடை அணிந்து வருமாறும் அன்புக் கட்டளையிட்டிருக்கிறார். பின்னர் பாடகர் டி.எம்.சௌந்தரராஜனிடமும் தெரிவிக்கப்பட்டது. அவரும் இசையமைப்பாளர்களே ஓகே சொன்னதால் சம்மதம் தெரிவிக்க பாடல் காட்சி ஒலிப்பதிவு செய்யும் விதம் படமாக்கப்பட்டது.
இப்படி இவ்வளவு சிரத்தை எடுத்து படமாக்குகிறீர்களே இந்தப் பாடலில் நடிக்கப் போவது யார் என்று டி.எம்.எஸ் கேட்க அதற்கு நாகேஷ் என பதிலளித்திருக்கிறார் குமரன். நாகேஷ்-க்கா இந்தப் பாடல் எம்.ஜி.ஆர்., சிவாஜி என்றால் ஜனங்க நல்லா என்ஜாய் பன்னுவாங்க என்று டி.எம்.எஸ் கூறியிருக்கிறார்.
ஆனால் டி.எம்.எஸ்-ன் கணிப்பைத் தவிடுபொடியாக்கும் வகையில் பாடல் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. அதன்பின் குமரனைச் சந்தித்த டி.எம்.எஸ். நீ ஜெயிச்சிட்டியா என்று வாழ்த்தியிருக்கிறார். இந்தப் பாடலில் நாகேஷின் அசத்தல் நடனம் இன்றும் புகழ்பெற்ற காட்சிகளில் ஒன்றாக இருக்கிறது.
மேலும் சர்வர் சுந்தரம் படத்தில் ஒரு காட்சியில் மழை எப்படி பொழியும், நடிகர் நடிகைகள் எப்படி காட்சிக்குத் தயாராவர், ஷுட்டிங் எப்படி நடக்கும் என காட்டியிருப்பார்கள் இயக்குநர்கள் கிருஷ்ணன் பஞ்சு.