சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் கோச்சடையான். அந்த படம் சம்பந்தப்பட்ட ஒரு வழக்கு ஒன்றில் லதா ரஜினிகாந்த் தற்போது ஆஜராகி உள்ளார். அது முடிந்த பிறகு அந்த வழக்கு குறித்தும் தன்மேல் போடப்பட்ட போலித்தனமான குற்றச்சாட்டுகள் மற்றும் பொய்யான புகார்கள் பற்றிய ஒரு விளக்கத்தை எல்லா ஊடகங்கள் முன்னதாகவும் தெளிவாகவும், விளக்கமாகவும் லதா ரஜினிகாந்த் கொடுத்துள்ளார்.
3d தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கே எஸ் ரவிக்குமாரின் கதை அமைப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து தீபிகா படுகோன் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தின் மேக்கிங் அதிக விமர்சனங்களுக்கு உள்ளாகி பின்னுக்கு தள்ளப்பட்டு இருந்தாலும் இந்த படத்தின் ஸ்கிரிப்ட் மற்றும் புதிய மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த படம் உருவான விதம் பலரிடையே பாராட்டுகளையும் பெற்றிருந்தது. இந்த படத்தின் போது தான் லதா ரஜினிகாந்த் மீது பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளது.
அதாவது கோச்சடையான் திரைப்படத்தை எடுப்பதற்காக மீடியா ஒன் நிறுவனத்தைச் சேர்ந்த முரளி என்பவர் அமீர் சந்திடம் 6.2 கோடி கடன் பெற்றுள்ளார். இதற்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாக கையெழுத்து போட்டதாகவும் குறித்த காலத்தில் இந்த பணத்தை திருப்பி தராததால் லதா ரஜினிகாந்த் அவர்கள் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இது தொடர்பான வழக்கு பெங்களூர் நீதிமன்றத்தில் கடந்த எட்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கிலிருந்து நிபந்தனை முன் ஜாமின் பெற்றதால் லதா ரஜினிகாந்த் அவர்கள் கைது செய்யப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்த வழக்கின் விசாரணைக்கு அவ்வபோது நீதிமன்றத்தில் ஆஜராகி வருகிறார் லதா ரஜினிகாந்த்.
இது பற்றி ஒரு தெளிவான விளக்கத்தை லதா ரஜினிகாந்த் தற்பொழுது கொடுத்துள்ளார் அதில் வாரண்ட் எனக்கு பிறப்பிக்கப்படவில்லை என்றும், நான் எந்த விதமான மோசடி வேலையை செய்யவில்லை என்றும் நான் யாரையும் ஏமாற்றவில்லை என்றும் நான் ஒரு செலிபிரிட்டியாக இருப்பதால் என்னை தொடர்ந்து வன்மத்துடன் தொல்லை கொடுத்து வருவதாகவும் சட்டத்திற்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்ற காரணத்தினால் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளதாகவும் விளக்கம் கொடுத்துள்ளார்.
சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி இந்த வழக்கு கர்நாடகாவிற்கு மாற்றப்பட்டது. நானும் இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று சொல்லி கோரிக்கை வைத்து வருகிறேன். கோச்சடையான் படம் தயாரிப்பின் பொழுது ரஜினி அவர்கள் எவ்வளவு உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தார் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். நாங்களும் உங்களை போல தான் எங்களது குடும்பத்திலும் சில ஏற்ற தாழ்வுகள் இருக்கும்.
அதனால் தான் அந்த முடிவிற்கு நான் தள்ளப்பட்டேன். உண்மையில் சட்டம் ஒன்று இருக்கிறதா என எனக்கு சந்தேகம் வந்துள்ளது. எங்களைப் போன்ற பிரபலமடைந்தவர்களுக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களுக்கு என்ன நிலைமையோ… அவர்களுக்கான நியாயம் கிடைக்குமா என்பது தெரியவில்லை. பத்து வருடங்களுக்கு மேலாக நான் இந்த சிக்கலை சமாளித்து வருகிறேன். என்னிடம் முறையிடும் வழக்கறிஞர்களும் இதுதான் சட்டம் இப்படித்தான் நாம் போராட வேண்டும் என கூறி வருகின்றனர்.
நாங்கள் ஊடகங்களின் முன் பிறருக்கு பயந்து செட்டில்மெண்ட் பேச வருவோம் என பலர் நினைக்கின்றனர். ஆனால் எங்கள் மீது தப்பில்லாத பொழுது நாங்கள் ஏன் இறங்கிச் செல்ல வேண்டும் என்று மிக தைரியமாக லதா ரஜினிகாந்த் கூறியுள்ளார். ஒரு கஷ்டமான சூழ்நிலையில் ஒருவருக்கு சாதகமாக நிற்பது தவறில்லை அது பின்வரும் காலங்களில் எவ்வளவு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும் இதற்கு தற்போது நடந்த நிகழ்வு சான்று என லதா ரஜினிகாந்த் கூறியுள்ளார். இதன் மூலம் சூப்பர் ஸ்டார் மனைவி லதா ரஜினிகாந்த் மீது இருந்த பொய்யான வதந்திகளை சமூக வலைதளங்களில் பரப்பியவர்களுக்கு ஒரு மரண அடியாக அமைந்துள்ளது.