லப்பர் பந்து படக்குழுவினர் வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் ஒவ்வொரு சினிமா பிரபலங்களாக சந்தித்து வருகின்றனர். கடந்த சில நாள்களுக்கு முன் இசைஞானி இளையராஜாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். தற்போது இயக்குனர் இமயம் பாரதிராஜாவை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர்.
லப்பர் பந்து படத்தின் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து கேப்டன் விஜயகாந்தின் தீவிர ரசிகராம். அதனால் படத்தில் ஹீரோக்களில் ஒருவரான அட்டகத்தி தினேஷை விஜயகாந்தின் தீவிர ரசிகராக சித்தரித்து இருந்தார். படம் முழுவதும் விஜயகாந்த் புகைப்படங்கள், பாட்டு என அசத்தி விட்டார். இதுதான் கோட் படத்தை விட விஜயகாந்துக்கு செய்த உண்மையான டிரிபியூட்னு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.
ஏனென்றால் கோட் படத்தில் விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பத்தில் கொண்டு வந்தனர். அது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஹைப்பை உருவாக்கியதே தவிர படம் வெளியானதும் பெரும் எதிர்பார்ப்பைப் பெறாமல் போனது.
இதற்குக் காரணம் அவசர கோலத்தில் அள்ளித் தெளித்துவிட்டார்கள் என்றே சொல்லலாம். படத்தில் விஜயகாந்த் வரும் காட்சியில் அவரது மேனரிசங்கள் எல்லாமே விஜயைப் போல இருந்தது. இது உண்மையான விஜயகாந்த் ரசிகர்களுக்கு அதிருப்தியை உண்டாக்கியுள்ளதாகவும் சொல்லப்பட்டது.
அந்த வகையில் விஜயகாந்தை படம் முழுவதும் நினைவூட்டும் வகையில் லப்பர் பந்து இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்புக்குள்ளானது. அதிலும் நீ பொட்டு வச்ச தங்கக்குடம் ஊருக்கு நீ மகுடம் பாடல் வரும்போது ரசிகர்களின் கரகோஷத்தால் தியேட்டரே களைகட்டியது.
லப்பர் பந்து படத்தை விளையாட்டுடன் சமூகக் கருததுகளையும் கலந்து இயக்குனர் சுவைபட சொல்லி இருப்பதால் பலதரப்பு ரசிகர்களிடம் இருந்து படம் பாராட்டைப் பெற்று வருகிறது.
படத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். அவர்களுடன் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, சுவாசிகா, பாலா சரவணன், காளி வெங்கட், கீதா கைலாசம், தேவதர்ஷினி, ஜென்சன் திவாகர் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த ஆண்டு வெளியான படங்களில் குறிப்பிடத்தக்க வகையில் மாஸ் ஹிட்டை அடித்த படங்களில் இதுவும் ஒன்று. ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார்.
லப்பர் பந்து படம் 15 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. ஆரம்பத்தில் இந்தப் படத்திற்கு 200 திரையரங்குகள் தான் கொடுக்கப்பட்டு இருந்தன. அதன்பிறகு படத்திற்கு கிடைத்த வரவேற்பால் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து 300 ஆனது.