சிறுத்தை, வீரம், விவேகம் உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கி உள்ளவர் தான் சிவா. இவரது இயக்கத்தில் அண்ணாத்த என்ற கமர்ஷியல் திரைப்படம் மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் முறையாக இணைந்திருந்தார். இதில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா, சூரி, ஜெகபதி பாபு என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு கிராமத்து பின்னணி கொண்ட கதையில் ரஜினி நடித்திருந்ததால் படத்தின் மீது எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகமாக இருந்தது.
ஆனால், அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. குடும்பமாக வந்து கொண்டாடி இருந்தாலும் ஒட்டுமொத்தமாக அண்ணாத்த படம் அனைவரையும் ஈர்க்கவில்லை என்பது தான் உண்மை. இந்த திரைப்படத்தில் 90ஸ் காலகட்டத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்த மீனா மற்றும் குஷ்பூ ஆகிய இருவரும் ஜாலியான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
தெரியாம நடிச்சுட்டேன்
இதனிடையே, சமீபத்தில் நடிகை குஷ்பூ ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட போது அவரிடம், ஏதாவது ஒரு திரைப்படத்தில் நடித்து முடித்த பின்னர், எண்ணத்தில் அதில் நடித்தோம் என வருந்தி இருக்கிறீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த குஷ்பூ, “சிறந்த உதாரணமாக சமீபத்தில் நான் நடித்த ரஜினியின் அண்ணாத்த படத்தை சொல்லலாம். முதலில் நானும் மீனாவும் தான் அந்த படத்தில் முதன்மை நடிகைகளாக நடிப்பதாக தெரிவிக்கப்பட்டது. வேறு எந்த நடிகையும் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவில்லை என்றும் கூறியிருந்தனர்.
காமிக்கலாக படம் முழுக்க வரும் கதாபாத்திரமாக இருந்ததால் நானும் மிகுந்த உற்சாகத்துடன் நடிப்பதற்கு சம்மதித்தேன். ஆனால் அண்ணாத்த படத்தின் இறுதி வெர்ஷனை பார்த்த போது நான் மிகுந்த ஏமாற்றமும் மன வேதனையும் அடைந்தேன். எனது கதாபாத்திரம் முற்றிலும் மாறிப் போனது. நான் நினைத்தது போல அங்கே எதையும் உணரவில்லை.
ரஜினி அப்படி பண்ணல..
டப்பிங் பார்த்த போது நான் நடித்த கதாபாத்திரம் கேலி சித்திரம் ஆனது போல உணர்ந்தேன்.புது நடிகையாக நயன்தாரா கிடைத்ததும் எல்லாமே மாறியது. ரஜினிகாந்த் இது போன்ற முடிவுகளை தனது படத்திற்காக எடுக்க மாட்டார். அவரை எனக்கு நீண்ட நாட்களாக தெரியும். இந்த மாற்றத்துக்கு என்ன காரணம் என்பதும் எனக்கு தெரியாது.
ஒரு வேளை ரசிகர்கள் கூட நினைத்திருக்கலாம். இல்லை என்றால் இயக்குனர் அல்லது தயாரிப்பாளர் கூட வேறு நடிகை உள்ளே வருவது தேவை என நயன்தாராவை கொண்டு வந்திருக்கலாம். ஆரம்பத்தில் எனக்கும் மீனாவுக்கும் தனித்தனி டூயட் கூட ரஜினியுடன் இருந்தது” என குஷ்பூ தெரிவித்துள்ளார்.