ஜப்பான் படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காத நிலையில், அப்செட்டான நடிகர் கார்த்தி தனது 25வது படம் படுதோல்வியை சந்தித்த நிலையில், அடுத்த படத்தை எப்படியாவது வெற்றிப் படமாக ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்கிற முடிவுடன் முழு மூச்சில் அடுத்த படத்தை விட்டு விட்டு புதிய படத்தை தொடங்கி உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
கார்த்தியை வைத்து கைதி 2 படத்தை எடுக்க வேண்டிய லோகேஷ் கனகராஜ் விஜய்யுடன் லியோ மற்றும் ரஜினிகாந்த் உடன் தலைவர் 171 படம் என பிசியாகி விட்டார்.
27வது படத்தை ஆரம்பித்த கார்த்தி
கார்த்தியின் 26வது படத்தை சூது கவ்வும், காதலும் கடந்து போகும் படங்களை இயக்கிய நலன் குமாரசாமி இயக்கி வருகிறார். இந்நிலையில், அந்த படத்தை பாதியில் நிறுத்தி வைத்து விட்டு இன்று முதல் புதிய படத்தின் ஷூட்டிங்கில் கார்த்தி இணைத்துள்ளதாகவும் 85 நாட்களில் ஒரே மூச்சில் அந்த படத்தில் நடித்து முடித்து ரிலீஸ் செய்து விட்டு தான் கார்த்தி 26வது படம் பக்கமே வருவார் என அதிர்ச்சி தகவல்கள் கசிந்துள்ளன.
விஜய்சேதுபதி – த்ரிஷா நடித்த 96 படத்தை இயக்கிய பிரேம் குமார் அதன் பின்னர் பல ஆண்டுகளாக எந்தவொரு படத்தையும் இயக்காமல் காத்திருக்கும் நிலையில், தற்போது அவர் இயக்கத்தில் உருவாகும் படத்தில் தான் கார்த்தி நடிக்க உள்ளதாகவும் அந்த படத்தில் அரவிந்த் சாமி வில்லனாக நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜப்பான் தோல்வி
இயக்குநர் ராஜு முருகனை ரொம்பவே நம்பி தனது 25வது படத்தை இயக்க கார்த்தி வாய்ப்பு கொடுத்தார். ஆனால், கிடைத்த பெரிய வாய்ப்பை ராஜு முருகன் கோட்டை விட்ட நிலையில், நலன் குமாரசாமி படத்தின் மீதும் பெரிய நம்பிக்கை இல்லாத நிலையில், திடீரென அந்த படத்தை நிறுத்தி விட்டு அடுத்ததாக பிரேம் குமார் சொன்ன கதை பிடித்துப் போக அந்த படத்தை உடனடியாக ஆரம்பித்துள்ளார் கார்த்தி என்கின்றனர்.
ஒரு படத்தின் தோல்வி நடிகர் கார்த்தியை எப்படி டோட்டலாக மாற்றி விட்டது என்று சினிமா வட்டாரத்தில் பெரும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
ஆனால், இன்னொரு தரப்பு கார்த்தி 26 படம் நிறுத்தப்படவில்லை என்றும் கார்த்தி டிரான்ஸ்ஃபர்மேஷன் செய்ய வேண்டிய நிலையில், அவரது போர்ஷன்கள் மட்டுமே நிறுத்தப்பட்டு இருப்பதாகவும் ராஜ்கிரண், சத்யராஜ் உள்ளிட்ட நடிகர்கள் அந்த படத்தில் நடித்து வரும் நிலையில், அவர்கள் போர்ஷன்களை நலன் குமாரசாமி தொடர்ந்து எடுத்து வருவார் என்றும் கூறுகின்றனர்.