இன்று கவிஞர் கண்ணதாசனின் நினைவு நாள். தமிழ் திரையிசைப் பாடல்களிலும், தமிழ் இலக்கியத் துறையிலும் தன்னுடைய அற்புத பாடல்களாலும், படைப்புகளால் சாகா வரம் பெற்று விளங்குகிறார். கவிஞர் என்றாலே அது கண்ணதாசனைத் தான் நினைவுப்படுத்தும். காதல் பாடலாகட்டும், தத்துவப் பாடலாகட்டும், சோகப் பாடலாகட்டும் எதிலுமே கண்ணதாசனுக்கு நிகர் அவரேதான். ஆனால் கண்ணதாசன் மீது ஒரு விமர்சனம் எழுந்தது. அவர் தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டவற்றைக் காப்பியடிக்கிறார் என்பது தான் அந்த விமர்சனம்.
ஒருமுறை வானொலியில் கல்லூரிப் பேராசிரியர் ஒருவரை இலக்கியங்களும், திரைப்படப் பாடல்களும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்த அழைப்பு வந்திருக்கிறது. அப்பேராசிரியரும் நிறைய உவமைகளைக் கூறி விட்டு பின்பு கண்ணதாசன் பக்கம் வந்தார். அவர் கண்ணதாசனைப் பற்றி அவர் எழுதிய பாடல்களில் நிறைய சங்க இலக்கியங்களின் சாயல் இருக்கிறது. அவர் நிறைய காப்பியடித்திருக்கிறார் என்று உரை நிகழ்த்தினார்.
இந்த நிகழ்ச்சி முடிந்த சுமார் அரைமணி நேரம் கழித்து அப்பேராசிரியருக்கு கண்ணதாசனிடமிருந்து ஓர் அழைப்பு வந்திருக்கிறது. மறுமுனையில் நான் கண்ணதாசன் பேசுகிறேன் என்றதும் பேராசிரியருக்கு ஒருபக்கம் ஆச்சர்யம்.. ஒருபக்கம் பயம். ஏனெனில் நம் உரை குறித்து ஏதும் சொல்லப் போகிறாரோ என்று தயக்கம். அவர் நினைத்தது போலவே கண்ணதாசன், அந்த பேராசிரியரிடம் நீங்கள் வானொலியில் உரை நிகழ்த்தியதைக் கேட்டேன். உங்களுக்குச் சில விஷயங்களைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
கண் திறந்த நீதி தேவதை.. ஆங்கிலேயர் கால நடைமுறைக்கு முடிவு கட்டிய உச்ச நீதி மன்றம்
பண்டைய இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் குருகுலக் கல்வியோடு நின்று விடுகிறது. அதை திரைப்படம் என்னும் ஊடக வாயிலாகச் சொல்லும் போது பாமரனும் ரசிக்கும் வகையிலும் அது சென்று சேர்ந்து விடுகிறது. எடுத்துக்காட்டாக மண விழாக்களில் சொல்லப்படும் வேதங்களில் கணவன் மனைவி ஒற்றுமையைக் குறிக்கும் “நான் மணமாக இருந்து நினைப்பேன்.. நீ வாக்காக இருந்து பேசு” என்று ஒரு வாக்கியம் உள்ளது. அதையே தான் நான் சற்று மாற்றி திரையிசைப் பாடலாக “நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்..” என்று எழுதிய போது குக்கிராமத்திலும், பள்ளிக் கூடம் போகாத பாமரனைக் கூடச் சென்றடைந்தது. எனவே இதனைத் தவறு என்று சொல்வீர்களா? என்று அப்பேராசிரியரைக் கேட்க, அவரால் பதில் ஏதும் சொல்ல இயலவில்லை.
தான் நிகழ்த்திய உரைக்கு கண்ணதாசனிடம் வருத்தம் தெரிவித்தார். மேலும் அவருக்கு கண்ணதாசன் மீதான மதிப்பும், மரியாதையும் அப்போது அதிகரித்திருந்தது. ஏனெனில் கண்ணதாசன் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை.