“நான் பேச நினைப்பதெல்லாம்..” அக்கா தங்கை பாடலை காதல் பாட்டாக்கிய கவியரசர் கண்ணதாசன்

By John A

Published:

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் 1961-ல் வெளிவந்த திரைப்படம்தான் பாலும் பழமும். நாயகியாக சரோஜாதேவி. பாசமலர் இயக்குநர் பீம்சிங்கின் மற்றுமொரு அற்புத படைப்பு. எம்.எஸ்.வி.-ராமமூர்த்தி இசையில் அத்தனை பாடல்களும் தேனில் ஊறிய பலா போல சுவை கொண்டதாக செவிகளுக்கு இன்றளவும் விருந்தளத்துக் கொண்டிருக்கிறது. நான் பேச நினைப்பதெல்லாம்.., ஆலயமணியின் ஓசையை.., கல்லெல்லாம் மாணிக்க…, போனால் போகட்டும் போடா.., என்னை யார் என்று.., போன்ற காலத்தால் அழியாத அழகிய பாடல்களுக்காகவே படம்சூப்பர் ஹிட் ஆனது.

கவியரசரின் வரிகளால் முத்து முத்தாக விழுந்த பாடல்கள் இது. இந்தப் படத்தில் இடம்பெற்ற நான் பேச நினைப்பதெல்லாம்… என்ற பாடலானது இந்தப் படத்திற்காக எழுதப்படவில்லை. கவியரசர் கண்ணதாசனை  அப்போது பாரதி பிலிம்ஸ் என்ற புதிய திரைப்படக் கம்பெனி தங்கள் படத்திற்காக  பாட்டெழுத ஒப்பந்தம் செய்திருக்கின்றனர்.

அப்போது அவர்கள் சொன்ன சீன் இதான். அக்கா, தங்கை கதாபாத்திரம். அக்காவிற்கு பேச்சு வராது. இதனிடையே அவர்களின் வீட்டுக்கு அருகில் புதிதாக வரும் இளைஞன் அக்காவினைப் பார்த்து காதல் கொள்கிறான். பின்னர் அவளையே மணம்  முடிக்க எண்ணும்போது வாய் பேச வராதது கண்டு அதிர்ச்சியாகிறான்.

அதிகாலை 4 மணிக்கு போன் செய்த கலைஞர்.. உடனடியாக பம்பரமாகச் சுழன்று வேலை செய்த இயக்குநர் விக்ரமன்.. எதற்கு தெரியுமா?

பின்னர் அவளது தங்கை தனது அக்காவை வெறுக்க வேண்டாம். வேண்டுமென்றால் அக்காவிற்காக நான் திருமணம் செய்து கொள்ளாமல் உடன் வாழ்கிறேன் என்று கூற, பின் திருமணம் நடக்கிறது. பிறகு குழந்தை பிறக்கும் போது தங்கையானவள் அக்காவிற்காக தாயின் பொறுப்பை ஏற்று குழந்தைக்குத் தாலாட்டு பாடுவதாக அமைந்த காட்சிக்கு கவியரசர் இவ்வாறு எழுதுகிறார்.

தாய் பேச நினைப்பதெல்லாம்

நீ பேச வேண்டும்…

தாய் தூங்கத் தாலாட்டு

நீ பாட வேண்டும்..

நீ பாடும் தாலாட்டைத்

தாய் கேட்க வேண்டும்…-தன்

நிலைமாறி அவள் கூட

மொழி பேச வேண்டும் .. என்று எழுதித் தருகிறார். பின்னர் அந்தக் கம்பெனியால் படம் எடுக்க முடியாமல் போகவே.. அந்தப் பாட்டை அப்படியே பாலும் பழமும் படத்திற்காக கவிஞர் காதல் பாட்டாக மாற்றுகிறார்.

நான் பேச நினைப்பதெல்லாம்
நீ பேச வேண்டும்..
நாளோடும் பொழுதோடும்
உறவாட வேண்டும்…

இப்படித் தொடங்கும் இந்தப் பாடலில் ஓராயிரம் அர்த்தங்கள் புதைந்துள்ளன. இவ்வாறாக கவிஞர் அக்கா-தங்கைப் பாடலையே காதல் பாட்டாக மாற்றி அதிலும் வெற்றி கண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.