நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கான முயற்சிகள் கடந்த சில ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட விலைவாசியின் காரணமாக நிதி நெருக்கடி ஏற்பட்டது. அதனால் இந்த பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன. தற்போது நடிகர் சங்க நிர்வாகிகள் நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிக்க வேண்டும் என்ற முயற்சியில் இருக்கின்றனர்.
அதற்காக வங்கியில் 40 கோடி கடன் வாங்க ஒப்புதல் வாங்கியிருப்பதாக பொருளாளர் கார்த்தி 67 வது சங்க பொதுக்குழு கூட்டத்தில் தெரிவித்திருந்தார். கடனை அடைப்பதற்காக கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றும் கூறினார்.
இந்த நிலையில், நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஒரு கோடி ரூபாய் கொடுத்து உதவி செய்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடுத்த காசோலையை நடிகர் சங்க நிர்வாகிகளான நாசர், விஷால், கார்த்தி, பூச்சி முருகன், கருணாஸ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
அதற்கு அடுத்தபடியாக உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் இன்று(09.03.2024) நடிகர் சங்க கட்டட பணிக்காக வைப்பு நிதியாக ஒரு கோடி ரூபாயை வழங்கியுள்ளார். இந்த ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி மற்றும் துணைத்தலைவர் பூச்சி முருகன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். உலகநாயகன் கமலஹாசன் தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளையின் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு இடங்களில் கிடைத்த நிதிகளை வைத்து ஏற்கனவே நடிகர் சங்க நிர்வாகிகள் கூறியது போல் இந்தாண்டிற்குள் நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடித்து இந்த வருட 68 வது நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தை புது கட்டிடத்தில் நடத்துவார்கள் என்று நடிகர் சங்க உறுப்பினர்கள் எதிர்பார்க்கிறார்கள்.