1999-ம் வருடங்களில் உலகநாயகன் கமல்ஹாசன் தனது கனவுப் படமான மருதநாயகத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். பின்னர் நிதிப் பற்றாக்குறை காரணமாக அந்தப் படத்தின் தயாரிப்புப் பணிகள் நிறுத்தப்பட்ட அப்போது கே.எஸ்.ரவிக்குமாரிடம் கமல் இரண்டு படங்களைத் தயாரிக்கலாம் எனக் கூறியிருக்கிறார்.
ஆனால் கே.எஸ்.ரவிக்குமார் தான் ஒருபடம் தயாரிப்பதாகக் கூறி எடுத்த படம் தான் தெனாலி. கமல் மற்றொரு படமான ஹேராம் படத்தை முடித்து விட்டு தெனாலியில் இணைந்தார். இந்தத் தலைப்பை பரிந்துரைத்தவர் யார் என்றால் சூப்பர் ஸ்டார் ரஜினி. இசை ஏ.ஆர்.ரஹ்மான் இப்படி பல ஜாம்பவான்களைக் கொண்டு உருவான தெனாலி படம் சூப்பர் ஹிட் ஆனது.
இந்தப் படத்தின் சிறப்பம்சமே கமல் பேசும் சிங்களத் தமிழ் தான். படத்தின் கதைப்படி சிங்கள உள்நாட்டுப் போரில் மன நலம் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழனாக இந்தியாவிற்கு வந்து சிகிச்சை பெறும் கதை. படம் முழுக்க கமல் காமெடியில் கலக்கியிருப்பார். மைக்கேல் மதன காமராசன், பஞ்ச தந்திரம், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், சதிலீலாவதி, பம்மல் கே. சம்பந்தம் போன்ற கமலின் காமெடிப் படங்கள் வரிசையில் தெனாலியும் சிறந்த பொழுது போக்குத் திரைப்படமாக அமைந்தது.
இந்தப் படத்தில் கமலுக்கு சிங்களத் தமிழைக் கற்றுத் தந்தவர் தான் பிரபல இலங்கை வானொலி அறிவிப்பாளர் அப்துல் ஹமீது. சன்டிவியில் பாட்டுக்குப் பாட்டு என்ற நிகழ்ச்சியின் மூலம் உலக அளவில் தொலைக்காட்சி நேயர்களுக்கும் பிரபலமான அறிவிப்பளாராகத் திகழ்ந்த அப்துல் ஹமீது அதற்கு முன்பாக இலங்கை வானொலியில் அறிவிப்பாளராக இருந்தது வானொலி கேட்கும் நேயர்களுக்கு நன்கு பரிச்சயம்.
பாட்டிலேயே எம்.ஜி.ஆருக்கு சமரச தூது விட்ட கவிஞர் கண்ணதாசன்.. அந்தப் பாட்டு வரிக்கு இதான் அர்த்தமா?
அதன் அடிப்படையில் கமல் அவர் அணுகி எனக்கு சிங்களத் தமிழ் சொல்லித் தர வேண்டும் என்று கேட்க, அதற்கு அப்துல் ஹமீது சிங்களத் தமிழ் என்று தனியாகக் கிடையாது. பாரதியாரே சிங்களத் தீவு என்று தான் குறிப்பிடுகிறார். என்று கூற, இலங்கையில் யாழ்பாணம் பகுதி மக்கள் பேசும் தமிழை எனக்குச் சொல்லித் தர வேண்டும் என்று கேட்டிருக்கிறார். பின்னர் அப்துல் ஹமீது கமல்ஹாசனுக்கு கிரேஸி மோகனின் வசனங்களை அப்படியே யாழ்ப்பாணம் தமிழில் எழுதிக் கொடுத்திருக்கிறார்.
இப்படி உருவானது தான் தெனாலி படத்தில் கமல் பேசும் இலங்கைத் தமிழ் இளைஞன் கதாபாத்திரம்.