உலகநாயகனை சினிமா உலகிற்கு அறிமுகப்படுத்திய களத்தூர் கண்ணம்மா பாடல் இப்படித்தான் உருவாச்சா..!

By John A

Published:

ஏவிஎம் தயாரிப்பில் 1960-ல் வெளிவந்த திரைப்படம்தான் களத்தூர் கண்ணம்மா. பீம்சிங் இயக்கத்தில் ஜெமினி,சாவித்திரி, கமல்ஹாசன் ஆகியோர் நடித்த இப்படம் சிறந்த படத்திற்கான தேசிய விருதையும், கமல்ஹாசனுக்கு முதல் படத்திலேயே சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தங்கத் பதக்கத்தினையும் பெற்றது. இப்படத்தினை முதலில் இயக்கியவர் பிரகாஷ் ராவ் என்ற இயக்குநர்.

ஆனால் பாதி படம் முடிந்த நிலையில் ஏவி மெய்யப்ப செட்டியார் பார்த்த போது திருப்தி இல்லாதால் அதனை இயக்குநரிடம் தெரிவிக்க, அப்போது பிரகாஷ் ராவ் இனி நான் மீதமுள்ள படத்தை எடுத்தாலும் உங்களுக்கு திருப்தி அளிக்காது. எனவே படத்திலிருந்து விலகிக் கொள்கிறேன் என்று கூறி வெளியேற பின் வந்து இயக்கியவர் தான் பீம்சிங்.

ஜாவர் சீதாராமன் என்பவர் களத்தூர் கண்ணம்மா கதையை எழுதியிருந்தார். இந்தப் படத்தில் கமல் அறிமுகமானார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இப்படத்தில் இடம்பெற்ற அம்மாவும் நீயே.. அப்பாவும் நீயே பாடல் கமல்ஹாசனின் பால்முகத்தை இன்றும் ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கிறது. காதில் பூவுடன் பால்ய வயது சிறுவனாக கமல்ஹாசனின் அந்த யதார்த்த நடிப்பு பார்ப்பவர்களை ரசிக்க வைத்தது. களத்தூர் கண்ணம்மா படத்திற்கு இசையமைத்தவர் ஆர்.சுதர்சனம்.

இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் ஒவ்வொன்றும் இன்றும் காதில் தேன் ஊற்றுபவை. காலத்தால் அழியாத காவியப் பாடல்களாக விளங்குகிறது. குறிப்பாக அம்மாவும் நீயே அப்பாவும் நீயே பாடலுக்கு இசையமைக்கும் போது கதை ஆசிரியர் ஜாவர் சீதாராமன் சுதர்சனத்திடம் காட்சி அமைப்பைக் கூறியிருக்கிறார். ஓர் அநாதைச் சிறுவன், ஆதரவற்றோர் இல்லத்தில் இருக்கும் போது பாடும் பக்திப் பாடல்தான் அது.

மகனால் மீண்டும் தமிழ் சினிமாவில் அடுத்த ரவுண்டு வந்த நடிகை.. சாந்தனு கொடுத்த ஊக்கத்தால் கலக்கும் பூர்ணிமா பாக்யராஜ்

அப்போது ஏ.வி.எம். குமரனும் அருகில் இருந்திருக்கிறார். இந்தப் பாடல் மிகவும் நுணுக்கமாகத் தெரிய வேண்டும். ஏனெனில் சிறுவன் பாடும் பாடல். இதனால் படத்தின் ஓட்டத்திற்குத் தடையாக இருக்கக் கூடாது. மேலும் பாடலும் ஹிட் ஆக வேண்டும் என்று இசையமைப்பாளரிடம் சொல்ல அவரும் பல டியூன்களைப் போட்டுக் கொடுத்திருக்கிறார்.

ஆனால் ஏ.வி.எம். குமரனுக்கு எதிலும் திருப்தி இல்லை. எனவே நாளை வேறு டியூன்கள் தருகிறேன் என்று கூறிவிட்டுக் கிளம்ப, சுதர்சனத்தின் உதவியாளர் ஏ.வி.எம். குமரனிடம் நான் முயற்சிக்கட்டுமா என்று கேட்டுள்ளார். அவரும் எனக்கு பாடல் நன்றாக வந்தால் போதும். டியூனைப் போடுங்கள் என்ற கூற, அவரும் ஓர் மெட்டைப் போட்டுக் காட்ட உருவானது தான் அம்மாவும் நீயே.. அப்பாவும் நீயே.. பாடல்.

ஆனால் இந்த டியூனைப் போட்ட உதவியாளர் எங்கே சுதர்சனம் கோபப்படுவாரோ என்று தயங்கியபடியே ஏ.வி.எம்.குமரனிடம் கூறிய போது, அதற்கு அவர் அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி அதை பக்குவமாய் சுதர்சனத்திடம் சொல்லி அனுமதி பெற்று அந்தப் டியூனைப் பயன்படுத்தி இப்பாடலை உருவாக்கினார்கள். இப்படித்தான் கமல்ஹாசனின் முதல் பாடல் உருவானது.