முழுநேர அரசியல்வாதி யாருன்னு சொல்லுங்க… நான் எதற்காக சினிமாவில் நடிக்கிறேன்னு சொல்கிறேன்… பொங்கிய கமல்

By Sankar Velu

Published:

கார் வசதி எல்லாம் எனக்குக் கொடுத்து வச்சிருக்கு. நான் எதற்காக அரசியலுக்கு வர வேண்டும்? என்று கேள்வி எழுப்பிய நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல் அதற்குப் பதிலும் இவ்வாறு சொல்கிறார். அவர் பேசியதில் இருந்து எவ்வளவு ஆவேசத்தை உள்ளுக்குள் புதைத்து வைத்து இருக்கிறார் என்பது தெரிகிறது. உங்கள் பார்வைக்கு ஒரு சில துளிகள்.

நான் அரசியலுக்கு சோகத்தில் வந்தவன். என் மக்களுக்கு ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என்ற கேள்வியுடன் வந்தவன் நான். நிறைய பேர் கேள்வி கேட்குறாங்க. நீங்க சினிமாவில் நடிக்கப் போறீங்களே… முழு நேர அரசியல்வாதி இல்லையான்னு அவங்கள்லாம் சொல்றாங்களே. முழு நேர அரசியல்வாதின்னு இருப்பவர்கள் யார்? ஒருவனும் கிடையாது என்பது தான் உண்மை. முழுநேர அப்பனும் கிடையாது.

முழுநேர கணவனும் கிடையாது. முழுநேர பிள்ளையும் கிடையாது. அவன் அவனுக்கு 8 மணி நேரம் வேலைக்குப் போகணும். 8 மணி நேரம் தூங்கியாகணும். நாலு மணி நேரம் வீட்டுல இருக்கணும். அப்ப முழுநேர அரசியல்வாதி யார் என்பதை எனக்குச் சொல்லுங்கள். நான் எதற்காக சினிமாவில் நடிக்கிறேன் என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

என்னை இத்தனை வருடமாக இந்த வீடு, இன்னொரு வீடு, காரு, வசதி எல்லாம் கொடுத்து வைத்து இருக்கிறீர்கள். நான் எதற்கு அரசியலுக்கு வர வேண்டும்? வந்தேன் என்றால் அதற்கு ஒரே காரணம்… உங்கள் அன்புக்கு கைமாறு இன்னும் செய்யவில்லை என்பது தான். நான் வரி கட்டிட்டேன். சினிமாவில் நடிச்சிட்டேன். என் கடமை முடிஞ்சதுன்னு போக முடியாது.

ஏன் என்றால் நீங்கள் கொடுத்த அன்பு அப்படியே பாக்கி இருக்கு. அதுக்கு வட்டி கூட கொடுக்கல நான். அதற்காகத் தான் நான் அரசியலுக்கு வந்தேன். ஏன் முழுநேர அரசியலுக்கு வரவில்லை என்று கேட்பவர்களுக்கு ஒன்று சொல்கிறேன். இந்த நிஜத்தை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.

Kamal
Kamal

இங்கே நடக்கும் இந்தக் கூட்டம். இங்கே இதற்குப் பிறகு கிடைக்கும் சிற்றுண்டி. இந்தக் கொடி. இந்த மேடை எல்லாமே நான் சம்பாதிச்சி வந்த காசுல இருந்து பண்ணது. இவரு என்ன இவ்வளவு திமிரா பேசுறாரே? இந்தத் திமிரெல்லாம் எனக்குப் பெரியார் கிட்டே இருந்து வந்தது.

பெரியார்கிட்ட இதே மாதிரி கணக்குக் கேட்ட போது டேய் இன்னொருத்தன் காசை எடுத்து செலவு பண்றவன் தான்டா கணக்குக் கொடுக்கணும். அல்வா இவ்வளவு சாப்பிட்டேன். சிகரெட் பிடிச்சேன்கறவன் தான் கணக்குக் கொடுக்கணும். இது என் காசு. அப்படின்னாரு. இவ்வாறு கமல் பேசினார்.