ஒரே ஒரு தேசிய விருது வாங்குவது என்பது சினிமா நட்சத்திரங்களுக்கு ஒரு கனவாக இருக்கும் என்பதும் ஒரு தேசிய விருது வாங்கி விட்டால் அவர்கள் தங்கள் ஆசையை பூர்த்தி செய்து விட்டதாக கூறுவார்கள் என்பதும் தெரிந்ததே.
ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் இருந்த சிவாஜி கணேசனுக்கு ஒரு தேசிய விருதுகூட கிடைக்கவில்லை. ஆனால் இசை புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு முதல் படத்திலேயே தேசிய விருது கிடைத்துவிட்டது. எனவே தேசிய விருது என்பது திறமையின் அடிப்படையில் கொடுக்கிறார்கள் என்பதைவிட அதிர்ஷ்டத்தின் அடிப்படையில்தான் கிடைக்கும் என்றும் ஒரு கருத்து நிலவி வருகிறது.
ஒரே தீபாவளியில் வெளியான 4 கமல்ஹாசன் படங்கள்.. எந்த வருடம்? என்னென்ன படங்கள்?
இந்த நிலையில் கமல்ஹாசன் குடும்பத்தில் உள்ள மூன்று பேர் தேசிய விருது வாங்கியுள்ளார்கள் என்பது ஆச்சரியத்திற்குரிய தகவலாகும். அதில் கமல்ஹாசன் மட்டுமே நான்கு தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.
கமல்ஹாசன் மிக அற்புதமாக நடித்த படங்களில் ஒன்று மூன்றாம் பிறை. பாலு மகேந்திரா இயக்கத்தில் உருவான இந்த படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி ஆகிய இருவருமே போட்டி போட்டுக் கொண்டு நடித்தார்கள். இந்த படத்தில் ஸ்ரீதேவிக்கு தான் தேசிய விருது கிடைக்கும் என்று கூறப்பட்டது. குழந்தைத்தனமான அவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்த நிலையில் ஸ்ரீதேவியின் நடிப்புக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.
ஆனால் கிளைமாக்ஸில் ஐந்தே ஐந்து நிமிடங்களில் கமல்ஹாசன் மிக அற்புதமாக நடித்து தேசிய விருதை தட்டி சென்றுவிட்டார். கடந்த 1982ஆம் ஆண்டு கமல்ஹாசனுக்கு மூன்றாம் பிறை திரைப்படத்திற்காக முதன்முதலாக தேசிய விருது கிடைத்தது.
இதனை அடுத்து ஐந்து ஆண்டுகளில் மீண்டும் ஒரு தேசிய விருதை அவர் பெற்றார். மணிரத்னம் இயக்கத்தில் ‘நாயகன்’ என்ற திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக கமல்ஹாசனுக்கு தேசிய விருது அளிக்கப்பட்டது. இந்த படத்தில் அவருடைய கேரக்டர் சர்ச்சைக்குரிய வகையில் இருந்த நிலையில், இந்த கேரக்டருக்கு தேசிய விருது கொடுத்தது பற்றி சிலர் கடுமையாக விமர்சனம் செய்தனர். ஆனால் தேசிய விருது அளிப்பவர்கள் அவரது கேரக்டர் என்ன சொல்கிறது என்பதை விட, அவரது நடிப்பை பார்த்து மட்டும் தான் விருது கொடுப்பார்கள் என்று கூறி சமாதானம் செய்யப்பட்டது.
இதனை அடுத்து அடுத்த ஐந்து ஆண்டுகளில் மீண்டும் ஒரு தேசிய விருது பெற்றார் கமல்ஹாசன். ஆனால் இந்த முறை அவர் தேசிய விருது பெற்றது நடிப்புக்காக அல்ல, தயாரிப்புக்காக என்பது குறிப்பிடத்தக்கது. 1992ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், கமல்ஹாசன் நடித்த தேவர்மகன் திரைப்படம் சிறந்த தமிழ் படம் என்ற விருது பெற்றது. இந்தப் படத்தை கமல்ஹாசன் தயாரித்திருந்தார்.
20 வருடங்களுக்கும் மேல் மோதிய கமல் – ரஜினி படங்கள்.. மாறி மாறி கிடைத்த வெற்றி..!
இதன் பிற்கு 1996ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘இந்தியன்’ திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்திற்கும் அவர் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார். ஆக மொத்தம் அவர் நான்கு தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.
கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசன் கன்னட திரைப்படம் ஒன்றுக்காக தேசிய விருது பெற்றார். Tabarana Kathe என்ற கன்னட படத்தில் அவர் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது கொடுக்கப்பட்டது. அதேபோல் கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசனின் மகளான சுகாசினிக்கும் தேசிய விருது கிடைத்துள்ளது.
கடந்த 1985ஆம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கத்தில் சிவகுமார், சுகாசினி, சுலக்சனா ஆகியோர் நடித்த ‘சிந்து பைரவி’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சுகாசினிக்கு தேசிய விருது கிடைத்தது. ஆக மொத்தத்தில் கமல்ஹாசன், அவருடைய சகோதரர் சாருஹாசன், சாருஹாசன் மகள் சுகாசினி என மூன்று பேருமே தேசிய விருதுகளை அள்ளிக் குவித்தனர்.
அதிலும் குறிப்பாக கடந்த 1985ஆம் ஆண்டு சுகாசினியும், 1986ஆம் ஆண்டு சாருஹாசனும், 1987ஆம் ஆண்டு கமல்ஹாசனும் என தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் கமல்ஹாசனின் குடும்பத்திற்கு தேசிய விருது கிடைத்தது.
சிவாஜி கணேசனுடன் ரஜினி, கமல் நடித்த படங்கள் இத்தனையா?
தேசிய விருது மட்டுமின்றி பத்ம விருது, சினிமா எக்ஸ்பிரஸ் விருது, தமிழ்நாடு அரசின் விருது என ஏராளமான விருதுகளை கமல்ஹாசன் குடும்பத்தினர் பெற்றுள்ளனர்.