கமலும், ரஜினியும் திரையுலக நண்பர்கள். இவர்கள் திரைத்துறையில் தான் ஆரோக்கியமாகப் போட்டி போடுவார்கள். நிஜத்தில் இவர்களைப் போன்ற நண்பர்கள் இருக்க முடியாது. கமலும், ரஜினியும் இணைந்து நடித்த காலகட்டத்தில் ரஜினியின் வளர்ச்சி கருதி கமல் தான் அவரைத் தனியாக நடிக்கச் சொன்னாராம்.
இருவரும் சேர்ந்து நடித்தால் தயாரிப்பாளர்களுக்குத் தான் லாபம். நாம் இருவரும் கடைசி வரை இப்படியே இருக்க வேண்டியது தான். அதனால் தனித்தனியாக நடிப்பது தான் நல்லது. இனி அப்படியே நடிப்போம் என்று சொன்னதும் இருவரும் பிரிந்து தனித்தனியாக நடித்தார்களாம்.
16 வயதினிலே, மூன்று முடிச்சு, தாயில்லாமல் நானில்லை, ஆடுபுலி ஆட்டம், அலாவுதீனும் அற்புத விளக்கும், இளமை ஊஞ்சலாடுகிறது, நினைத்தாலே இனிக்கும் போன்ற படங்களில் கமலும், ரஜினியும் இணைந்து நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் கமல் ரஜினிக்குப் பல ஆலோசனைகளை அவ்வப்போது வழங்குவதுண்டு. படையப்பா படத்தின் போதும் அப்படி ஒரு ஆலோசனையை வழங்கியுள்ளார். அது தான் படத்தின் வெற்றிக்கும் காரணமாக அமைந்தது. வாங்க என்னன்னு பார்ப்போம்.
இந்தப் படத்தில் முதலில் 19 ரீல்கள் எடுக்கப்பட்டதாம். படம் 4 மணி நேரம் ஓடும். அதைப் பார்த்த ரஜினி எந்த சீனையும் கட் பண்ண வேண்டாம் என்று சொல்லி விட்டார். ரவிக்குமாரும் 2 இடைவேளை விட்டு விடலாம் என சொன்னாராம்.
அன்று தன் நண்பர் கமலிடம் ரஜினி இது குறித்து ஆலோசனை கேட்டாராம். அப்போது கமல், 2 இடை வேளை விட்டால் நம் ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள். அந்த அளவுக்கு அவர்கள் இன்னும் வரவில்லை. அதனால் இந்தப் படத்தில் டைரக்டரிடமே பொறுப்பை ஒப்படைத்து விடு. அவர் எடிட் செய்து காட்சிகளைக் குறைக்கட்டும் என்று சொன்னாராம்.
அந்த ஆலோசனையைக் கேட்டு ரஜினியும் ரவிக்குமாரிடம் சொல்ல, அவர் தேவையில்லாத காட்சிகளை எடுத்து விட்டு படத்தைக் கதையோட்டம் பாதிக்காதவாறு ட்ரிம் பண்ணி 16 ரீல்களாக சுருக்கினாராம். அதைப் பார்த்த ரஜினிக்கும் திருப்தியாக இருந்ததாம்.
ஒருவேளை கமலிடம் ஆலோசனை கேட்காமல் இருந்தால் படத்தில் 2 இடைவேளை விட்டு பலருக்கும் படம் எவ்வளவு தான் விறுவிறுப்பாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் போரடித்து இருக்கக்கூடும். அதனாலேயே படத்தின் நீளம் கருதி பலரும் தியேட்டருக்கு வராமல் இருந்து விடுவார்கள். அந்த வகையில் பிறவிக்கலைஞனான கமல் சொன்ன ஆலோசனை அவர்களுக்குப் பலித்து விட்டது என்றே சொல்லலாம்.