நடிகர் கமல்ஹாசன் ஒவ்வொரு திரைப்படங்களில் நடிக்கும் போதும் அதில் எதாவது ஒரு புதுமையான விஷயத்தை தமிழ் சினிமாவில் புகுத்தி கொண்டே இருப்பார் என்பது வழக்கமான ஒரு விஷயம் தான். அவர் இயக்கி நடித்த விஸ்வரூபம் திரைப்படம் கூட ஆடியோ டெக்னாலஜியில் ஒரு புதிய புரட்சியை கொண்டு வந்திருந்தது.
இப்படி கமல் நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றிலும் நிறைய புதுமையான விஷயங்கள் இருக்கும் சூழலில் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் அவர் நடித்த தசாவதாரம் படம் கூட அந்த வகையில் வருவது தான். மொத்தம் 10 வேடங்களில் கமல்ஹாசன் நடித்திருக்க ஒவ்வொரு கதாபாத்திரமும் அந்த படத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.
வியக்க வைத்த கமல்
அதிலும் பாட்டியாக, சீன நாட்டை சேர்ந்தவராக, வெள்ளைக்காரனாக என ஒவ்வொரு கதாபாத்திரமும் கொஞ்சம் கூட தொடர்பு இல்லாமல் பார்ப்பதற்கு முற்றிலும் மாறுபட்ட லுக்காக அமைந்திருந்தது. அது மட்டுமில்லாமல், பாஷை, உச்சரிப்பு, குரல் உள்ளிட்ட விஷயங்களில் கதாபாத்திரத்துக்கு கதாபாத்திரம் மாற்றத்தை கொடுத்திருந்தார் கமல்ஹாசன்.
தசாவதாரம் படத்தில் வரும் மணல் கொள்ளையை தட்டி கேட்கும் சமூக ஆர்வலர் பூவராகன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கமல். இந்த கேரக்டர் பின்னணியில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி இருக்கிறார் என்பது வியப்பான உண்மை. தசாவதாரம் படத்தின் கதையை சொன்ன போது கலைஞர் கொடுத்த ரியாக்ஷன் பற்றியும், படம் வெளியான பின்னர் பார்த்து விட்டு தன்னை பாராட்டியது பற்றி கமலே ஒரு நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.
அது யாருக்கும் புரியாது
“தசாவதாரம் பட சமயத்தில் கலைஞர் கருணாநிதி அவர்களை சந்தித்த போது, ‘என்ன படம் எடுத்துக் கொண்டிருக்கிறாய்?’ என என்னிடம் கேட்டார். படத்தின் கதையை சொல்லி சதுப்பு நிலங்கள் அழிந்து கொண்டு வருவதை எதிர்த்து பூவராகன் என்ற கதாபாத்திரம் அதற்காக போராடுவதாக கதை எழுதி வருகிறேன் என கலைஞரிடம் கூறினேன்.
‘அது யாருக்கும் புரியாதுப்பா. மக்கள் புரியுற மாதிரி பண்ணனும். மணல் கொள்ளையை பற்றி எழுது’ என என்னிடம் கூறினார். இதன் பின்னர் அவர் சொன்னது போலவே அமைத்து படம் வெளியான பின்னர் அதை பார்த்து விட்டு எனது கன்னத்தை கிள்ளினார் கருணாநிதி. அது இன்னும் எனக்கு ஞாபகம் உள்ளது. எப்படி எடுத்துருக்கான் பாருய்யா. இங்கிலீஷ் படம் மாதிரி எடுத்துருக்கான் என நான் இல்லாத இடத்தில் கூட என்னை பற்றி சொன்னது செய்தியாக என்னிடம் வந்து சேர்ந்தது” என கமல்ஹாசன் கூறியுள்ளார்.