தமிழ் சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி ஒரு முழு ஆதிக்கம் பெற்ற தலைவராக இருந்தவர் கலைஞர் மு கருணாநிதி. அவர் எழுதிய எத்தனையோ வசனங்கள் இன்றளவும் மக்கள் மனதில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன.
அதிலும் குறிப்பாக பராசக்தி வசனத்தை யாராலும் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. சொல்லப் போனால் தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு கேட்டு வரும் ஒவ்வொரு கலைஞர்களும் பேசக்கூடிய வசனமாக பராசக்தி வசனம் தான் முக்கியத்துவம் பெறுகிறது .
அந்த வகையில் கலைஞரின் வசனத்தில் மூன்று படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ரீபிரியா. மாடி வீட்டு ஏழை, பாடாத தேனீக்கள், குலக்கொழுந்து போன்ற படங்களில் கலைஞர் வசனத்தில் ஸ்ரீ பிரியா நடித்ததை பற்றி ஒரு கட்டுரையில் அவரே சில தகவல்களை கூறியிருக்கிறார்.
கலைஞர் அந்த மூன்று படங்களுக்கும் வசனம் எழுதியதோடு மட்டுமல்லாமல் ஸ்ரீபிரியாவிடம் இந்த வசனம் உனக்கு பேசுவதில் சிரமம் இருந்தால் சொல்லிவிடு. உனக்கு ஏற்ற வகையில் நான் மாற்றிக் கொள்கிறேன். ஒரு வேளை நான் இல்லாத சமயத்தில் அந்த வசனத்தில் ஏதாவது சில விஷயங்கள் மாற்றத் தோன்றினால் நீயே மாற்றிக்கொள் என கூறினாராம் கலைஞர்.
அது மட்டுமல்லாமல் மனோரமாவிற்கு ஒரு சமயம் விழா எடுக்க வேண்டும் என நினைத்து அந்த விழாவில் முக்கிய பொறுப்பில் இருந்தாராம் ஸ்ரீ பிரியா. மனோரமாவை பற்றி பாராட்டும் வகையில் ஒரு கட்டுரை வேண்டும் என ஸ்ரீபிரியா கலைஞரிடம் கேட்டிருக்கிறார். சரி நாளை வந்து பெற்றுக் கொள் என கூறி இருக்கிறார்.
ஸ்ரீ பிரியாவும் கலைஞர் வீட்டிற்கு செல்ல அங்க அந்த கட்டுரை தயாராக இருந்ததாம். அங்கு இருந்த உதவியாளர் ஒருவர் கலைஞர் உங்களிடம் பேச வேண்டும் எனச் சொன்னார் எனக் கூறி அவருடைய தொலைபேசி எண்ணையும் கொடுத்தாராம். ஸ்ரீ பிரியா கலைஞரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது கலைஞர் ஸ்ரீ பிரியாவிடம் கட்டுரையை படித்துப் பார்த்தாயா? இது போதுமா இல்லை இன்னும் கொஞ்சம் வேண்டுமா எனக் கேட்டாராம்.
இதைப்பற்றி ஸ்ரீ பிரியா அவருடைய கட்டுரையில் 100 ஆண்டு காலம் ஆகியும் இன்னும் மக்கள் மனதில் கலைஞர் ஒரு நிலையான இடத்தை பிடித்திருக்கிறார் என்றால் இது போன்ற சம்பவங்கள் தான் காரணம் எனக் குறிப்பிட்டு இருக்கிறார். அது மட்டுமல்லாமல் கலைஞரே ஒரு சமயம் தமிழை அழகாக பேசி நடிக்கக்கூடிய நடிகைகளின் ஸ்ரீ பிரியாவும் ஒருவர் என பாராட்டி இருப்பதாக ஒரு பேட்டியில் ஸ்ரீபிரியா கூறி இருக்கிறார்.