இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது இயக்கத்தில் வெளியாகும் படங்களில் கார்த்திக் சுப்புராஜ் படம் என போட்டுக் கொள்வார். உண்மையிலேயே ஜிகர்தண்டா படத்திற்கு பிறகு அவர் அப்படியொரு டைட்டிலை போட்டுக் கொள்ள தரமான படம் என்றால் அது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் தான்.
அரைத்த மாவையே அரைத்து கமர்ஷியல் படங்கள் இப்படித்தான் இருக்கும் என்று சொல்லிக் கொண்டு ரசிகர்களை ஏமாற்றும் இயக்குநர்கள் மத்தியில் கார்த்திக் சுப்புராஜ் கொரியன் படத்தின் இன்ஸ்பிரேஷனாக எடுத்த ஜிகர்தண்டா திரைப்படம் பலரையும் கவர்ந்தது.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் விமர்சனம்
இந்நிலையில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படமும் அருமையான சினிமா கிராஃப்ட் உடன் படமாக்கப்பட்டுள்ளது. ஹீரோவின் பெயரில் இருந்து எஸ்.ஜே. சூர்யாவின் கதாபாத்திரம் வரை அனைத்துமே அழகாகவும் வித்தியாசமாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.
முதல் கருப்பு ஹீரோவாக வேண்டும் என ஆலீஸ் சீசரான ராகவா லாரன்ஸ் ஆசைப்படுவதும், அவரை ஹீரோவாக்குகிறேன் என இயக்குனர் அவதாரம் எடுத்து வந்து ஆப்பு வைக்கத் துடிக்கும் எஸ்.ஜே. சூர்யா இறுதியில் யார் பக்கம் சேர்கிறார் என கதையும் காட்சிகளும் அழகாக அடுக்கப்பட்டு ஒரு நல்ல படத்தை பார்த்த ஃபீலை தருகின்றது.
சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை மற்றும் பிட்டு பிட்டாக வரும் பாடல்கள் என அனைத்துமே பக்காவாக உள்ளன. ஆரம்பத்தில் கதையை செட் செய்து ரசிகர்களை உள்ளே இழுத்துக் கொள்ள இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் எடுத்துக் கொள்ளும் கால அளவு தான் ரசிகர்களை சற்றே பொறுமையை இழக்கச் செய்கிறது.
ராகவா லாரன்ஸ் இந்த ஆண்டு ருத்ரன் படத்திலும், சமீபத்தில் வெளியான சந்திரமுகி 2 படத்திலும் நடிக்கிறேன் என்கிற பெயரில் ரசிகர்களை கதறவிட்ட நிலையில், கார்த்திக் சுப்புராஜ் ராகவா லாரன்ஸை எப்படி பயன்படுத்த வேண்டும் என மற்ற இயக்குனர்களுக்கு பாடம் எடுக்கும் வகையில் இப்படியொரு லைஃப் டைம் செட்டில்மென்ட்டை கொடுத்துள்ளார்.
எஸ்.ஜே. சூர்யா கால் வைத்த இடங்கள் எல்லாம் கலக்கல் வெற்றி தான் என்பது இந்த ஆண்டு மீண்டும் இந்த படத்தின் மூலமும் நிரூபனம் ஆகி உள்ளது. பீஸ்ட் படத்தில் ஷைன் டாம் சாக்கோவை சரியாக பயன்படுத்தாத நிலையில், இந்த படத்தில் அவரை வைத்தே கதையை ஆரம்பித்து இருப்பதும் மலையாள ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
நிமிஷா சஜயன் தமிழுக்கு இந்த படத்தின் மூலம் அறிமுகமாகி உள்ள நிலையில், அவருடைய நடிப்பு அளவாகவும் ஆழமாகவும் உள்ளது. மலைவாழ் மக்களின் வாழ்க்கை, யானைகள் பற்றிய கதை என சமூக அக்கறையையும் தொட்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் ஒருமுறை அல்ல பலமுறை பார்க்க வேண்டிய படமாகவே உள்ளது.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் – தீபாவளி வின்னர்
ரேட்டிங் – 4/5.