சன்னி லியோனை வைத்து வீரமாதேவி படத்தை இயக்கி வந்த வடிவுடையான் அந்தப் படம் டிராப் ஆன நிலையில், மல்லிகா ஷெராவத் மற்றும் ஜீவனை வைத்து பாம்பாட்டம் எனும் படத்தை இயக்கினார். நீண்ட கால தாமதத்திற்கு பிறகு ஒருவழியாக இன்று அந்த படம் வெளியானது.
பாம்பாட்டம் விமர்சனம்:
வாத்தியார், 6.2 , ஆர்யாவின் ஓரம்போ போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்பன் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. காக்க காக்க படத்தில் வில்லனாக மிரட்டிய ஜீவன் அதன் பின்னர் யுனிவர்சிட்டி, நான் அவன் இல்லை, மச்சக்காரன் உள்ளிட்ட பல படங்கள் நடித்து வந்தவர் பல ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் மூலம் கம் பேக் கொடுத்திருக்கிறார். விஸ்வரூபம் படத்தில் கமல்ஹாசனுடன் நடித்த கலாசலா நடிகை மல்லிகா ஷெராவத் இந்தப் படத்தில் பேயாக நடித்துள்ளார். மேலும், யாஷிகா ஆனந்த், சலில் அன்கோலா, ரமேஷ் கண்ணா, ஆண்ட்ரியா குருநாதன், லிவிங்ஸ்டன், கராத்தே ராஜா, ரிக்கின், சரவணன், சக்தி சரவணன், ரித்திகா சென், சுமன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
சுதந்திர போராட்டத்திற்கு முந்தைய கதையாக இந்த படம் ஆரம்பிக்கிறது. ஒரு பெரிய சமஸ்தானத்தை ஆண்டு வரும் ராணி மகாதேவி பாம்பு கடித்து இறப்பார் என ஜோசியர் ஒருவர் கூறுகையில், ஊரில் ஒரு பாம்பு கூட இருக்கக்கூடாது என மகாதேவி உத்தரவிடுகிறார். அவரது உத்தரவை கேட்டு அவரது காவலாளிகள் ஊரில் உள்ள அனைத்து நாகங்களையும் கொன்று குவிக்கின்றனர். ஆனால் அதிலிருந்து ஒரே ஒரு பாம்பு மட்டும் தப்பித்து வந்து ஹிஸ் படத்தில் பாம்பாக நடித்த மல்லிகா ஷெராவத்தையே போட்டுத் தள்ளுகிறது.
அதன் பின்னர் அவரது மகளுக்கும் அதே போன்று பாம்பு கடித்து இறப்பார் என ஜோசியர் கூற, அந்த ஊரில் இருந்து வேறு ஒரு இடத்துக்கு செல்கின்றனர். அந்த அரண்மனையில் ராணி மகாதேவி ஆவியாக சுற்றி அலைவதாக கூறுகின்றனர். போலீஸ் அதிகாரியாக ஹீரோ ஜீவன் வருகிறார். அந்த ஊரில் நடக்கும் பிரச்சனையை அவர் எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் பாம்பாட்டம் படத்தின் கதை.
பயங்கர கிராபிக்ஸ் கொண்ட கதையை எடுத்துக் கொண்டு லோ பட்ஜெட்டில் நாகினி சீரியலை விட மோசமாக எடுத்தே தீருவேன் என அடம் பிடித்து இயக்குனர் செய்திருக்கும் நிலையில், சந்திரமுகி 2 படத்தில் கங்கனா ரனாவத் நான்கு நாய்களுடன் சண்டை போடுவது போன்ற மோசமான கிராபிக்ஸ் படம் என்னதான் கதையை சொல்ல வந்தாலும் அதை ரசிக்கவும் முடியாமல் சீட்டில் உட்காரவும் முடியாமல் தெறித்து ஓட வைத்து விடுகிறது.
ஜீவன் மற்றும் மல்லிகா ஷெராவத்தின் தீவிர ஃபேனாக இருந்தால், ரிஸ்க் எடுத்து ஒரு முறை இந்த படத்தை பார்க்கலாம். மற்றவர்கள் பாம்பாட்டம் பக்கமே போகத் தேவையில்லை.
பாம்பாட்டம் – படுமோசம்!
ரேட்டிங் – 2/5.