அந்த கதை ரொம்ப புடிச்சுருக்கு… ரேவதி நடித்து ஹிட்டான படத்தில் நடிக்க ஆசைப்பட்ட ஜெயலலிதா.. கடைசி நிமிசத்தில் நடந்த ட்விஸ்ட்..

By Ajith V

Published:

இந்திய சினிமாவின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர் ரா. செல்வராஜ். இவர் ஒரு சில திரைப்படங்களையும் இயக்கி உள்ள சூழலில், தமிழ் சினிமாவில் பல பிரபலமான இயக்குனர்களுடன் இணைந்து பணிபுரிந்துள்ளார். பாரதிராஜாவின் பெரும்பாலான படங்களில் எழுத்தாளராக பணிபுரிந்த செல்வராஜ், இயக்குனர் மணிரத்னத்துடன் இணைந்து அலைபாயுதே உள்ளிட்ட படங்களில் பணியாற்றி உள்ளார்.

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான எழுத்தாளராக இருந்த செல்வராஜ், ‘பொண்ணு ஊருக்கு புதுசு’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருந்தார். இதனைத் தொடர்ந்து, விஜயகாந்தை வைத்து அகல்விளக்கு என்ற திரைப்படத்தையும், பின்னர் கார்த்திக்கை வைத்து பகவதிபுரம் ரெயில்வே கேட் என்ற திரைப்படத்தையும் செல்வராஜ் இயக்கி இருந்தார்.

தமிழ் சினிமாவின் சிவாஜி கணேசன் தொடங்கி பல ஜாம்பவான்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் பணிபுரிந்துள்ள செல்வராஜுக்கு ஒரு சில ஏக்கங்கள் இருந்துள்ளது. அதாவது, தனது திரை பயணத்தில் கலைஞர் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவருடன் இணைந்து பணிபுரிய முடியவில்லையே என்ற ஏக்கம் தான் அது.

கலைஞர் மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவருடனும் பணிபுரியும் வாய்ப்பு, செல்வராஜுக்கு கிடைத்தது. ஆனால், அது பாதியிலே கைநழுவி போனது தான் வருத்தம். கலைஞரை ரா. செல்வராஜ் ஒரு முறை சந்தித்த போது கதை இருந்தால் சொல்லுங்களேன் என கேட்க, அவர் சொன்ன ‘உன்னை விடமாட்டேன்’ கதை கலைஞருக்கு மிகவும் பிடித்து போய் விட்டது. தொடர்ந்து, இந்த கதை பற்றி விவாதிக்க கலைஞர் அழைக்க ரா. செல்வராஜின் தனிப்பட்ட காரணங்களால் அந்த கதை அப்படியே நின்று போனது.

அதே போல, பாரதிராஜா முதலாவதாக இயக்க இருந்த படத்தில் ஜெயலலிதா மற்றும் முத்துராம் ஆகியோர் தான் நடிப்பதாக இருந்தது. முன்னதாக, ஜெயலலிதாவிற்கு கதை சொல்ல பாரதிராஜா மற்றும் ரா. செல்வராஜ் போக, அந்த கதையும் ஜெயலலிதாவுக்கு பிடித்து போய் விட்டது. பின்னர் படத்திற்கான பணிகள் ஆரம்பமாக சில பல காரணங்களால் அந்த படமும் அறிவிப்போடு நின்று போனது.

பின்னாளில் இதே கதையைத் தான் நடிகை ரேவதியை வைத்து பாரதிராஜா இயக்கி இருந்தார். இந்த படத்தின் பெயர் ‘புதுமைப்பெண்’. இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்க, ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படி ரா. செல்வராஜ், கலைஞர் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோருடன் பணிபுரியும் வாய்ப்பு கடைசி வரை கிடைக்காமலே போனது. மேலும், ஜெயலலிதாவுக்கு பிடித்த கதையில் ரேவதி நடித்து படம் பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.