சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் கூலி படத்துக்கான டீசர் வெளியானது. இதில் ரஜினி நடித்த தங்கமகன் படத்தில் வரும் வா வா பக்கம் வா என்ற பாடல் உபயோகப்படுத்தப்பட்டது. இதற்கு இசைஞானி இளையராஜா கடும் எதிர்ப்பு தெரிவித்து நோட்டீஸ் விட்டார். இது பலத்த சர்ச்சையைக் கிளப்பியது.
அது மட்டும் அல்லாமல் ரஜினி ரசிகர்கள் மத்தியில் இவர் பணத்தாசை பிடித்தவர், வன்மம் பிடித்தவர் என்றும் சொல்லப்பட்டது. இவருக்கு இதுவரை சம்பாதித்தது போதாதா? இந்த வயதில் இவருக்கு இது தேவையா? இவரது புகழுக்கு இவரே களங்கம் விளைவிக்கலாமா என்றெல்லாம் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் உண்மையில் நடப்பது என்ன என்று பிரபல யூடியூபரும், திரை ஆய்வாளருமான ஆலங்குடி வெள்ளைச்சாமி இவ்வாறு தன் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
பொதுவா அவரு வன்மம் பிடிச்சவரா இருந்தா அவரு எப்படி 1000 படங்களுக்கு இசை அமைச்சிருப்பாரு? தொடர்ச்சியா பாடகர்களோடு, இசைக்கலைஞர்களோடு, நடிகர்களோடு, தயாரிப்பாளர்கள், பாடலாசிரியர்கள், இயக்குனர்கள் என இத்தனை பேருடன் வேலை பார்க்க வேண்டியுள்ளது. அப்படி வன்மம் இருந்தால் இந்தளவு வேலை பார்க்க முடியுமா? அதனால் மனதளவில் பெரிய அளவில் வன்மம் இருக்க வாய்ப்பில்லை. இன்னொன்னு பணத்தாசைப் பிடிச்சி அலையறாரான்னு கேட்குறாங்க.
அந்தக் காலகட்டத்துல எவ்வளவோ படங்களுக்கு இசை அமைச்சிக்கிட்டு இருப்பாரு. ஒரு பக்கம் ரீ ரிக்கார்டிங்னா, இன்னொரு பக்கம் மெட்டு போட்டுக்கிட்டு இருப்பாரு. இன்னொரு பக்கம் ரெக்கார்டிங் ஓடிக்கிட்டு இருக்குமாம். அவருக்கு இயக்குனரும், கதையும் பிடிச்சிருந்தா குறைந்த பணத்துலயும், இருக்குறத வாங்கிக்கிட்டு இசை அமைச்சாராம். பாலுமகேந்திராவோட கடைசி படத்துக்குப் பணமே வாங்காம இசை அமைச்சாராம்.
1000 படங்களுக்கு இசை அமைத்த அவருக்கு அன்னைக்கு எல்லாம் பணம் பெரிய பொருட்டா தெரியல. ஆனா இன்னைக்கு ஏன் பணத்தைப் பொருட்படுத்தறாருங்கற கேள்வி எழலாம். இவர் உலகமயமாக்கலுக்கு முன்னாடி வந்துட்டாரு. அவரு வந்து 18 வருஷம் கழிச்சித் தான் இணையதளமும் விரைவாக இயங்கி வந்தது. அதுக்கு முன்னாடி இளையராஜா பாடல்கள், படங்கள் எல்லாம் கொண்டாடி விட்டார்கள்.
அந்தக் காலகட்டத்தில் இவருக்கு இப்படி எல்லாம் ராயல்டி வருமா வேற என்னன்ன வரும்னு இவரு யோசிக்கறதுக்கு முன்னாடி பலரும் யோசிச்சி இவரை வச்சி நிறைய சம்பாதிச்சிட்டாங்க. இவரு ஓய்வு எடுக்கற நேரத்துல படங்கள் குறையற போது இவரு நிதானமா யோசிச்சிப் பார்த்தாரு. இவருக்குப் பின்னால வந்த சின்ன சின்ன இசை அமைப்பாளர்கள் எல்லாம் குறைவா இசை அமைச்சி ராயல்டி அது இதுன்னு நிறைய சம்பாதிச்சிட்டாங்க.
நம்ம இவ்வளவு படத்துக்கு இசை அமைச்சிருக்கோமே… நம்ம இதை மிஸ் பண்ணிட்டோமோ என்ற எண்ணம் இவருக்குத் தோன்றுகிறது. நம் உழைப்பை வேற யாரோ மறைமுகமா சாப்பிடுறாங்க. நாம ஏமாற்றப்பட்டு விட்டோமோ என அந்தப் பெரிய கலைஞனுக்கு கோபம் வருகிறது. அதனால தான் அவரை இப்படி வழக்குப் போட வச்சிருக்கு.
இது சம்பாதிக்கறதுக்காக இல்ல. நம்மை விட குறைவா வர்ற இசை அமைப்பாளர்கள் இப்படி யோசிக்கும்போது நாம் யோசித்தால் என்ன என்று தான் இப்படி எல்லாம் நடந்து கொள்கிறார். இதுபற்றி பலரும் அவரை சமூகவலைத்தளங்களில் வறுத்தெடுக்கிறார்கள். ஆனாலும் அவரது இசையை யாராலும் குறை சொல்ல முடியாது. இதற்குக் காலம் தான் பதில் சொல்லும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.