டிசம்பர் மாதம் என வந்துவிட்டாலே அந்த ஒரு ஆண்டில் நடந்த முக்கியமான சம்பவங்களும் முக்கியமான திரைப்படங்களும், டாப் 10 நடிகர்கள், நடிகைகள் என பல விதமான பட்டியல்கள் தொடர்ந்து பல தளங்களில் வெளியிடப்பட்டு கொண்டே இருக்கும். அந்த வகையில் தற்போது பிரபல சினிமா தளமான Imdb, இந்த ஆண்டு தங்களது தளத்தில் அதிகமாக ரேட்டிங் வாங்கிய இந்திய திரைப்படங்கள் தொடர்பான பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில், அதில் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்கள் ஏற்படுத்திய தாக்கம் பற்றி தற்போது பார்க்கலாம்.
Imdb என்ற தளம் பொதுவாக திரைப்படங்களின் ரேட்டிங் உள்ளிட்ட விஷயங்கள் மற்றும் அந்தந்த திரைப்படங்கள் வெளியாவது தொடர்பான பலவித தகவல்களை தங்களது தளத்தில் வைத்திருக்கும். இதில் நேயர்கள் கூட தங்களது ரிவ்யூவை பதிவு செய்யலாம் என்ற நிலையில் அதன் அடிப்படையில் பத்திற்கு பல திரைப்படங்கள் ஒன்பதுக்கு மேற்பட்ட மதிப்பெண்களையும் பெற்றுள்ளது.
டாப் 10 இந்திய படங்கள்
அந்த வகையில், 2024 ஆம் ஆண்டுக்கான இந்திய திரைப்படங்களில் அதிக மதிப்பெண்களை பெற்ற திரைப்படங்களின் பட்டியலும் தற்போது வெளியாகி உள்ளது. இதில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை வெளியான அப்டேட்டில் 10 வது இடத்தில் மலையாள திரைப்படமான ஆட்டம் உள்ளது. இது 8.2 மதிப்பெண்களை பெற்றுள்ள நிலையில் 9 வது இடத்தில் இருக்கும் மற்றொரு மலையாள திரைப்படமான கிஷ்கிந்தா காண்டமும் 8.1 ரேட்டிங் பெற்றுள்ளது.
தொடர்ந்து 8 வது இடத்தில் இருக்கும் மம்மூட்டியின் பிரம்மயுகம் 7.8 ரேட்டிங்கை பெற்றாலும் 9 வது மற்றும் 10 வது இடத்தில் உள்ள படங்களை விட முன்பே வெளியாகி இருந்ததால் குறைந்த மதிப்பெண்ணுடன் 8 வது இடத்தில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் படங்களின் தாக்கம்
இதனைத் தொடர்ந்து ஏழாவது இடத்தை தமிழ் திரைப்படமான ‘லப்பர் பந்து’ (8.2) பிடித்துள்ள நிலையில் ஆறாவது இடத்தில் ஹிந்தி திரைப்படமான லப்பாட்டா லேடீஸ் உள்ளது. தொடர்ந்து டாப் 5 இடங்கள் அனைத்தையும் மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்கள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது.
இதில் ஐந்தாவது இடத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான வாழை திரைப்படமும் (7.8), நான்காவது இடத்தில் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த பகத் பாசிலின் மலையாள திரைப்படமான ஆவேசமும்(7.8), மூன்றாவது இடத்தில் பலரையும் எமோஷனலாக கலங்க வைத்த கார்த்தி மற்றும் அரவிந்த் சாமியின் மெய்யழகன் திரைப்படமும் (8.4), இரண்டாவது இடத்தில் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படமும் (8.2) இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
அரியணையில் மகாராஜா
இந்த IMDB-ன் டாப் 10 இந்திய படங்கள் பட்டியலில் தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் தற்போது சீனாவில் வெளியாகி சூப்பர் ஹிட்டாகி வரும் விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படம் முதலிடத்தை பிடித்துள்ளது.
மகள் மற்றும் தந்தை உறவை பற்றி மிக எதார்த்தமாக, பல சிக்கல்களை சிறந்த திரைக்கதை அமைப்புடன் எந்தவித குழப்பமும் இல்லாமல் எடுத்துக் கூறியதற்கு இயக்குனர் நிதிலனின் மகாராஜா திரைப்படம் சர்வதேச அளவில் பாராட்டுகளை பெற்றிருந்தது. அந்த வகையில் ஐஎம்டிபி தளத்தில் முதலிடம் பெற்று அதற்கான அங்கீகாரத்தை இன்னும் வலுப்படுத்தி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.