செமஸ்டருக்குப் போகாமல் சித்ரா பாடிய பாட்டு.. இளையராஜா கொடுத்த நம்பிக்கையால் தேசிய விருது வென்ற ஹிட் பாடல்!

By John A

Published:

கீதாஞ்சலி திரைப்படத்தில் இளைராஜாவின் இசையில் ‘துள்ளி எழுந்தது பாட்டு.. சின்னக்குயிலிசை கேட்டு‘ என்ற வைரமுத்துவின் வரிகளைப் பாடி இசை உலகில் சின்னக்குயில் சித்ரா என்று பெயரெடுத்தவர் பிரபல பின்னனிப் பாடகி சித்ரா. கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட சித்ரா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஒரியா, அசாமி போன்ற இந்திய மொழிகள் பலவற்றில் பாடி வருகிறார்.

மலையாள இயக்குனர் பாசில் தம்முடைய ‘நோக்காத தூரத்து கண்ணும் நட்டு’ என்ற வெற்றிப் படத்தை தமிழில் மொழி மாற்றம் செய்ய விரும்பினார். அந்தப் படத்தில் சில பாடல்களைப் பாடியிருந்த சித்ராவுக்கு இளையராஜா அழைப்பு விடுத்தார். இளையராஜாவின் இசையமைப்பில் நீ தானா அந்தக் குயில்என்ற திரைப்படத்தில் அவர் பாடிய ‘பூஜைக்கேத்த பூவிது’, ‘கண்ணான கண்ணா உன்னை என்ன சொல்லி தாலாட்ட ‘ என்ற இரு பாடல்களும் அவருக்கு ஹிட் கொடுக்க தொடர்ந்து இளையராஜாவின் இசையில் பல பாடல்களைப் பாட ஆரம்பித்தார். அப்போது அவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் சித்ராவிற்கு இளையராஜாவின் இசையில் சிந்து பைரவி படத்தில் பாடக் கூடிய வாய்ப்புக் கிட்டியது. இசை சம்பந்தப்பட்ட படம் என்பதால் பிரபல கர்நாடக இசைப் பாடகரான கே.ஜே.யேசுதாஸை இப்படத்தின் பாடல்கள் அனைத்தையும் பாட வைத்தார் இளையராஜா. இருப்பினும் சித்ராவின் குரலில் இரண்டு பாடல்கள் உருவாகி பெரும் வெற்றி பெற்றது. நானொரு சிந்து என்ற பாடலும், பாடறியேன் என்ற பாடலையும் சித்ரா பாடினார்.

அருணாச்சலம் படத்துக்கு முதல்ல வைச்ச டைட்டில் என்ன தெரியுமா? சுந்தர்.சி ஓபன் டாக்

இப்படத்தின் பாடல் கம்போஸிங்கின் போது முதலில் நானொரு சிந்து என்ற பாடலை சித்ரா பாடி முடித்து விட்டாராம். பின் அவர் கிளம்பும் போது இளையராஜா தடுத்து நிறுத்தி மாலையில் இன்னொரு பாடலையும் பாட வேண்டும் என்று கூறியிருக்கிறார். ஆனால் அப்போது எம்.ஏ. செமஸ்டர் என்பதால் சித்ரா யோசித்தார். இவரது தந்தையும் மறுநாள் தேர்வுக்குப் போக வேண்டும் என்று கூற இளையராஜாவோ செமஸ்டர் தேர்வை அடுத்த செமஸ்டரில் கூட எழுதிக் கொள்ளலாம். ஆனால் இந்தப் பாடல் உனக்கு அழியாப் புகழ் கொடுக்கப் போகிறது என்று கூற உடனே சித்ராவும் ஒப்புக் கொண்டு பாடறியேன்.. படிப்பறியேன் என்ற பாடலைப் பாடியிருக்கிறார்.

பின் சிந்து பைரவி படம் வெளியாகி பாடல்களுக்காகவே ஓடியது. கே. பாலச்சந்தரும் மகிழ்ச்சியின் உச்சியில் இருந்தார். அந்த வருடமே சிறந்த பின்னனிப் பாடகிக்கான தேசிய விருதினை சித்ரா இந்தப் பாடலுக்காகப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.