இன்று சுமார் 1100 படங்களுக்கு மேல் இசையைமத்து இந்திய திரை உலகு மட்டுமல்லாது இசைத் துறைக்கே ஒரு ஞானியாகத் திகழ்பவர்தான் இசைஞானி இளையராஜா. அன்னக்கிளியில் ஆரம்பித்த பயணம் கடைசியாக வெளியான ஜமா படம் வரை பல்வேறு இசைப் பயணத்தினைக் கடந்து வந்துள்ளது. தற்போதைய இசையமைப்பாளர்கள் அனைவரும் இளையராஜாவின் சாயல் இல்லாமல் இசையமைப்பது கடினமே. ஏனெனில் இசையின் அத்தனை நுணுக்கங்களையும் தனது பாடல்களில் பயன்படுத்தியிருப்பார் இசைஞானி.
1970 முதல் 1995-ம் ஆண்டுவரை இளையராஜாவின் காலம் என்றே சொல்லலாம். சுமார் 25 ஆண்டுகாலம் இசைத்துறையை ஆட்சி செய்தார் இளையராஜா. ஒரே நாளில் பல பாடல்களைக் கம்போஸிங் செய்த காலம் உண்டு. அப்படி இசைஞானி ஒரே நாளில் அதுவும் 3 மணிநேரத்தில் 3 படங்களுக்கு 21 பாடல்களைக் கொடுத்து அசத்தியிருக்கிறார். 1990-ம் இளையராஜா உச்சத்தில் இருந்த நேரம். அப்போது இளையராஜாவின் கால்ஷீட்டுக்காக இயக்குநர்கள் கால்கடுக்க காத்திருந்த நேரம்.
ஒருமுறை இளையராஜாவினைப் பார்க்க இயக்குநர் கேயார் வருகிறார். தான் படம் இயக்கப் போவதாகக் கூற இளையராஜாவுக்கு அதிர்ச்சி. ஏனெனில் கேயார் அதற்கு முன்பாக தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் திரைத்துறையில் இருந்தவர். இந்நிலையில் பஞ்சு அருணாச்சலம் சொல்லியதற்காக கேயாரின் இயக்கும் படத்திற்கு இசையமைக்க ஒப்புக் கொள்கிறார். அப்படி உருவான படம் தான் ஈரமான ரோஜாவே திரைப்படம்.
இந்தப் படத்தின் பாடல் பணிகளுக்காக இளையராஜா கொச்சிக்குப் போகலாம் என்று கூற இயக்குநர் கேயாரும் உடன் செல்கிறார். அங்கு இறங்கியவுடன் இரவில் ஹோட்டலில் தங்க மறுநாள் காலை 7 மணிக்கெல்லாம் இளையராஜா அழைக்கிறார். ஏதோ சுற்றிப் பார்க்கத்தான் அழைக்கிறார் என்று கேயார் செல்ல அங்கு ஹார்மோனியப் பெட்டியுடன் காத்திருந்தார் இசைஞானி. கேயாருக்கு அதிர்ச்சி. இருந்து 2 நாட்கள் சுற்றிப் பார்த்துவிட்டு பின்னர் டியூன் போடலாமே என்று கூற, அது அப்புறம் பார்க்கலாம். முதலில் வந்த வேலையைப் பார்ப்போம் கதையைச் சொல்லுங்கள் என்று கூற, அடுத்த அரைமணிநேரத்தில் முத்து முத்தாக 5 டியூன்கள் விழுகிறது.
அது முடிந்தவுடன் இளையராஜா ஏற்கனவே இரண்டு இயக்குநர்களை வரச்சொல்லியிருந்தார். அவர்களையும் அழைத்து மைடியர் மார்த்தாண்டன், பின் பாரதிராஜாவுக்கு நாடோடித் தென்றல் உள்ளிட்ட படங்களுக்கு டியூன் போட அடுத்த மூன்று மணி நேரத்தில் மொத்தம் 21 பாடல்களுக்கு பாடல்கள் ரெடியாகி விட்டது. இந்த மூன்று படங்களுமே சூப்பர் ஹிட் பாடல்களைக் கொண்டிருக்கும். இப்போதுள்ள இசையமைப்பாளர்கள் ஒரு பாடலுக்கே ஒருவாரம் எடுத்துக் கொள்ளும் நிலையில் பம்பரமாய் சுழன்று 3 மணிநேரத்தில் 21 பாடல்களுக்கு டியூன் போடுவது என்பது நிச்சயம் இளையராஜா இசைஞானி என்பதற்குச் சான்றாகத்தான் விளங்குகிறது.