அப்போது தமிழுக்கு இளையராஜா தனது இசைக்காக புதிதாக ஒரு குரலைத் தேடிக் கொண்டிருந்த நேரம். பிரபல பாடகரான ஜெயச்சந்திரன் அப்போது கலை நிகழ்ச்சிகளிலும், கச்சேரிகளிலும் பாடிக் கொண்டிருந்த ஒரு பெண்ணை இளையராஜாவுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
அவருக்கு இளையராஜா தான் இசையமைத்த மீரா படத்தில் லல்வுன்னா லவ்வு.. என்ற பாடலில் ஆஷா போஸ்லேவுடன் இந்தப் பாடகியைப் பாட வைக்கிறார். அந்தப் பாடலில் இவரின் குரல் இளையராஜாவிற்குப் பிடித்துப் போக தொடர்ந்து தனது இசையில் பாட வைக்கிறார்.
ஆனால் இளையராஜா பாடலில் கிடைக்காத ஒரு புகழ் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடிய ஒரே பாடலில் அவருக்கு ஈடான புகழைக் கொடுக்கிறது. அந்தப் பாடகி தான் மின்மினி. அவர் பாடிய பாடல் தான் ரோஜா படத்தில் இடம்பெற்ற சின்ன சின்ன ஆசை பாடல். அதுவரை சரியான வாய்ப்புகள் இன்றி பாடிக் கொண்டிருந்த பாடகி மின்மினி சின்ன சின்ன ஆசை பாடல் மூலம் பிரபலம் ஆகிறார். தொடர்ந்து வாய்ப்புகள் தேடி வர ஆரம்பிக்கிறது.
மேலும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையிலேயே பல பாடல்களைப் பாட ஆரம்பிக்கிறார். கேரளாவைச் சேர்ந்த மின்மினி தமிழின் முக்கிய பாடகராக அவதாரம் எடுத்தார். தொடர்ந்து அவர் பாடிய காதலன் படத்தில் இந்திரையோ இவள் சுந்தரியோ.. கருத்தம்மாவில் பச்சைக் கிளி பாடும் ஊரு.. திருடா திருடாவில் வரும் ராசாத்தி என் உசிரு எனதில்ல (ஹம்மிங்), ஜென்டில்மேன் படத்தில் பார்க்காதே பார்க்காதே எனப் பல பாடல்களைப் பாடி ஹிட் கொடுத்தார்.
காலம் கடந்து பேசும் தத்துவப் பாடல் படங்களின் இயக்குநர்.. இதெல்லாம் இவர் எடுத்ததா?
இந்நிலையில் தாலாட்டு என்ற படத்திற்காக மெதுவா தந்தி அடிச்சானே.. என்ற பாடலை இளையராஜாவின் ஸ்டுடியோவிற்குச் சென்று பாட ஆரம்பிப்பதற்கு முன் இளையராஜா அவரிடம், “நீ ஏன் அங்க இங்க போய் பாடிக்கிட்டு இருக்க.. இங்கேயே பாடு“ என்று கோபமாகப் பேசினாராம். அன்று இளையராஜாவின் மற்றொரு முகத்தை மின்மினி பார்த்தாராம். அப்போது அவர் அழுதுவிட்டாராம்.
இளையராஜா தமிழில் அறிமுகப்படுத்துவதற்கு முன்பே மலையாளத்தில் பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடி வந்துள்ளார் மின்மினி. இருந்தபோதும் என்னை ஏன் அவ்வாறு கூறினார் என்று எனக்குத் தெரியவில்லை என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் மின்மினி. இவருக்கு மினி என்கிற பெயரை மின்மினி என மாற்றியது இளையாராஜாதான் என்பது குறிபிடத்தக்கது.