இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் என்றாலே அது தேனாமிர்தம் தான். எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காது. அது 80ஸ் குட்டீஸ்களுக்கு நல்லாவே தெரியும். அவரது பாடல்கள் தான் எங்கு போனாலும் கேட்பார்கள்.
நைட் ஷிப்டில் வேலை செய்பவர்கள், கடை வைத்து இருப்பவர்கள் எல்லாம் இவரது பாடல்களைக் கேட்டபடியே மெய்மறந்து வேலை செய்வார்கள். அது அவர்களுக்கு அலுப்பு தெரியாமல் செய்யும் வேலையையும் உற்சாகமாகச் செய்ய வைக்கும்.
சமீபத்தில் சென்னையில் நடந்த இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்கு வந்திருந்த கூட்டமே அதற்கு சாட்சி. தூறல் போட்ட போதும் இன்னிசை மழையில் நனையவே பலரும் விரும்பி அங்கிருந்து எழாமல் இசையை ரசித்தபடியே இருந்தது ஆச்சரியம் தான்.
பாடல்களுக்கு இடையிடையே இசைஞானி பாடல்கள் உருவானது பற்றிய குறிப்புகளை எடுத்துச் சொன்னார். அது பார்வையாளர்களை ரொம்பவே ரசிக்க வைத்தது. அப்படி ஒரு பாடல் தான் அபூர்வ சகோதரர்கள் படத்தில் இடம்பெற்ற புதுமாப்பிள்ளைக்கு பாடல்.
இந்தப் பாடல் உருவான விதம் பற்றி சொன்ன இளையராஜா, என்னிடம் நாலு பேர் மட்டும் தான் எதைப் பற்றியும் என்னிடம் எதிர்பார்க்காமல் சூழலைப் பற்றி மட்டும் சொல்லி பாட்டு வாங்கிப் போவார்கள். அது மணிரத்னம், மகேந்திரா, பாலுமகேந்திரா, பாரதிராஜா என்றார்.
அந்தவகையில் இந்தப் பாடலைப் பற்றி கமல் என்னிடம் கேட்கும்போது ‘எனக்கு ஜாலியாக, உற்சாகம் பொங்க பாடுற மாதிரி ஒரு பாடல் வேணும்’னு கேட்டார். ‘எந்த மாதிரி பாடல்’னு நான் அவரிடம் கேட்டேன். அதற்கு ‘நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான்’ என்ற எம்ஜிஆர் பாடலைச் சொன்னார்.
உடனே நான் ‘புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா’ என்று மெட்டுப் போட்டுக் கொடுத்தேன். ‘அதே தான்’ என்று கமல் உற்சாகமானார். ஆனால் நான் அந்தப் பாடலைத் தான் இப்படி மாற்றினேன் என்று அவருக்கேத் தெரியாது. இவ்வாறு இளையராஜா கூற அரங்கம் கலகலப்பானது.
அந்தப் பாடல் அபூர்வ சகோதரர்கள் படத்தில் குள்ளமாக வரும் அப்பு கமல் உற்சாகம் பொங்க பாடும் பாட்டு. படத்தின் இமாலய வெற்றிக்கு அந்த வேடம் தான் முக்கிய காரணம். அந்த ரகசியத்தைக் கமல் இன்று வரை உடைக்காமல் வைத்துள்ளார். அந்த அப்பு கமல் உற்சாகம் பொங்க புதுமாப்பிள்ளைக்குப் பாடலில் ஆடுவது ரசிகர்களை ரொம்பவே கவர்ந்தது. அது மட்டுமல்லாமல் இசைஞானியின் இசை நம்மைத் துள்ள வைத்தது உண்மை தான்.