கமல்ஹாசன் ஒரு நடிகராக தமிழ் சினிமாவை தாண்டி சர்வதேச அரங்கில் எப்படி கவனம் ஈர்த்து தொழில்நுட்ப விஷயங்களை முயற்சி செய்கிறாரோ, அதற்கு நிகராக அவரது இயக்கத்தின் திறனுக்கும் பலர் இங்கே பெரிய ரசிகர்களாக உள்ளனர். கமல் ஒரு நடிகர் என்பதை தாண்டி அவரை ஒரு இயக்குனராக இங்கே ரசிப்பவர்களும் ஏராளம்.
ஹேராம், விருமாண்டி, விஸ்வரூபம் என கமல் இயக்கிய திரைப்படங்கள் திரைக்கதையின் புத்தகங்களாகவே இருக்க, ஒவ்வொரு காட்சிகளும் சினிமா பிரியர்கள் ரசிக்கும் அளவுக்கு ஏதாவது ஒரு நுணுக்கத்தை வைத்து அசர வைப்பவர் கமல்ஹாசன். அந்த வகையில், அவர் இயக்கிய விருமாண்டி திரைப்படத்தின் திரைக்கதையே இந்திய சினிமாவுக்கு புதிதாக இருக்க, சினிமாவில் சாதிக்க துடிக்கும் இளசுகளுக்கு இந்த படம் புத்தகமாகவே உள்ளது.
நான் ம்யூசிக் பண்ணமாட்டேன்
விருமாண்டி திரைப்படத்திற்கு இளையராஜா இசையில் உருவான பாடல்கள் பட்டித் தொட்டியெங்கும் ஹிட்டடிக்க, பின்னணி இசையும் பலரை ஈர்த்திருந்தது. ஆனால், முதலில் விருமாண்டி படத்திற்கு இளையராஜா இசையமைக்க மறுத்துள்ளார். இது பற்றி அவரே ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், “விருமாண்டி கதையை கமல் என்னிடம் சொன்னார். ‘இதில் இசைக்கே வேலை இல்லை. முழுவதும் வெட்டும், குத்துமாக இருக்கிறது. நான் இசையமைக்க மாட்டேன். வேறு யாரையாவது இசையமைப்பாளராக போடுங்கள்’ என சொல்லிவிட்டேன்.
இதன் பின்னர் 2 நாட்கள் கழித்து கமல்ஹாசன் மீண்டும் என்னை சந்திக்க வந்தார். நான் வேண்டாம் என சொன்ன பின்னர், அவர் தனது குழுவில் இருக்கும் சிலருடன் இசையமைக்க மறுத்தது பற்றி பேசியுள்ளார். அப்போது அதில் சிலர், வெட்டு குத்து காட்சிகளை தாண்டி வரும் சில காட்சிகளை குறிப்பிட்டு அதை பற்றி விவரித்தீர்களா என கேட்டுள்ளனர். அப்போது கமல் இல்லை என சொன்னதும், ‘அந்த காட்சிகளை பற்றி சொல்லி பாருங்கள். அதை விட்டுட்டு வெட்டு குத்து காட்சிகளை மட்டும் சொன்னால் எப்படி அவர் ஒத்துக் கொள்வார்’ என்றும் கேட்டுள்ளனர்.
பாடல் எழுதிய கமல்
இதன் பின்னர் கமல் என்னிடம் சில காட்சிகளை சொல்லி, ஒன்ன விட இந்த உலகத்தில் உசந்தது ஒண்ணுமில்ல போன்ற ஒரு பாடல் வரும் இடத்தை சொன்னதும் நான் வியந்து பார்த்தேன். பின்னர் விருமாண்டி படத்திற்கு இசையமைக்கவும் முடிவு செய்தேன்” என இளையராஜா கூறினார். தொடர்ந்து பேசிய கமல், “அந்த பாடலை எழுத ஒரு பாடலாசிரியரை தேடியதும் என்னையே எழுதும்படி இளையராஜா கூறினார்.
நானோ வேறு வேலைகள் நிறைய இருப்பதாக கூற, முதல் வரியை கொடுத்து விட்டேன். நீங்கள் மற்ற வரிகளை எழுதுங்கள் என என்னை அறிவுறுத்தினார். உன்னை விட பாடலின் முதல் வரியை அவர் சொல்ல, மற்ற வரிகளை நான் எழுதினேன்” என கமல் தெரிவித்துள்ளார்.