அன்பு மகளே.. மகள் பவதாரிணி மறைவுக்கு பின் இளையராஜா பகிர்ந்த முதல் புகைப்படம்!..

By Ajith V

Published:

இந்திய சினிமாவின் மிக முக்கியமான இசையமைப்பாளர்களில் ஒருவர் இளையராஜா. இவரது குடும்பத்தினரை கடும் சோகத்தில் ஆழ்த்தும் துயரம் ஒன்றும் சமீபத்தில் அரங்கேறி இருந்தது. இளையராஜாவின் மகளும் பாடகியான பவதாரிணி, தனது 47 வது வயதில் மறைந்தார்.

இவர் கடந்த சில மாதங்களாக புற்றுநோய் காரணமாக அவதிப்பட்டு வந்ததாக தகவல்கள் கூறுகின்றது. அப்படி இருக்கையில், இதற்கான ஆயுர்வேத சிகிச்சைக்காக பவதாரிணி இலங்கையில் தங்கி இருந்து அதனை முறைப்படி மேற்கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் அதற்கான பலன் கிடைக்காமல் அவர் 47 வயதில் உயிரிழந்தது, திரை உலகில் உள்ள அனைவரையும் மீளாத் துயரில் ஆழ்த்தி உள்ளது.

சிறு வயது முதலே பாடல்கள் பாட ஆரம்பித்த பவதாரிணி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் பல ஹிட் பாடல்களை பாடி உள்ளார். என்னை தாலாட்ட வருவாளா, மயில் போல பொண்ணு ஒன்னு, தென்றல் வரும் வழியே, ஆத்தாடி ஆத்தாடி உள்ளிட்ட பல பாடல்களை கேட்டாலே பாவதாரிணியின் தனித்துவமான குரல் தான் நமக்கு முதலில் தேனாக வந்து காதில் பாயும்.

சமீபத்தில் கூட மாநாடு, மாமனிதன் உள்ளிட்ட படங்களில் சகோதரர் யுவன் ஷங்கர் ராஜா இசையில் பவதாரிணி பாடி இருந்தார். இது தவிர சில படங்களின் இசையமைப்பாளாராகவும் பணிபுரிந்துள்ளார். பலரை தன் பக்கம் ஈர்த்த காந்தம் போல மிகவும் அசத்தலான குரலில் இனி புதிய பாடல்களை கேட்க முடியாது என்பதே பலரை கடும் துயரில் கலங்க வைத்துள்ளது.

பவதாரிணியின் சகோதரர்கள் யுவன் ஷங்கர் ராஜா, கார்த்திக் ராஜா மற்றும் தந்தை இளையராஜா உள்ளிட்டோரும் பவதாரிணி மறைவால் கடும் வேதனையிலும், கண்ணீரிலும் உறைந்து போயுள்ளார்கள். பவதாரிணியின் உடலை பார்க்க சமீபத்தில் இவர்கள் இலங்கை சென்றிருந்த புகைப்படங்களும் வெளியாகி இருந்தது.
ilaiyaraaja bhavadharini

இந்த நிலையில், மகளின் மறைவுக்கு பின்னர் தனது எக்ஸ் தளத்தில் முதல் பதிவு ஒன்றை இளையராஜா பகிர்ந்துள்ளார். இதில், குழந்தையாக இருக்கும் பவதாரிணியுடன் இளையராஜா இருக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ள நிலையில், “அன்பு மகளே” என தனது கேப்ஷனில் மிகவும் மனமுடைந்து அவர் குறிப்பிட்டுள்ளார்.
ilaiyaa

கமல்ஹாசன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் கூட, இளையராஜா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அஞ்சலியுடன் ஆறுதலையும் தெரிவித்து வருகின்றனர்.