காரைக்காலில் பிறந்த பாலா சினிமா கனவுகளுடன் சென்னைக்கு வந்தார். விஜய் டிவியில் அமுதவாணனின் ஆதரவை பெற்ற பாலா அது இது எது என்ற நிகழ்ச்சியில் சிறு வேடங்களில் தோன்றுவதன் மூலம் வாய்ப்புகளை தேட ஆரம்பித்தார்.
அதன் பின்பு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்க போவது யாரு என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட பாலா கலக்க போவது யாரு சீசன் 6 இல் வெற்றி பெற்றார். பின்பு குக் வித் கோமாளி என்ற நகைச்சுவை சமையல் நிகழ்ச்சியில் பல்வேறு தோற்றங்களை அணிந்து பார்வையாளர்களை கவர்ந்தார். அதுமட்டுமில்லாமல் இவர் டைமிங்கில் செய்யும் காமெடியால் புகழ் பெற்றார். பல மேடை நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கியுள்ளார்.
அடுத்ததாக 2018 ஆம் ஆண்டு நடிகர் விஜய் சேதுபதி நடித்த ‘ஜூங்கா’ படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகம் ஆனார். மேலும் ‘தும்பா’, ‘காக்டைல்’ போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
பாலா தனது நடிப்பு, நகைச்சுவை ஆகியவற்றால் பிரபலமடைந்ததை விட சமீப காலமாக அவர் செய்து வரும் தொண்டு பணிகளால் புகழ் பெற்று வருகிறார். சிலர் அவரை ‘கலியுக கர்ணன்’ என்றும் கூட அழைக்கிறார்கள் . தனது சொந்த உழைப்பில் கிடைக்கின்ற வருமானத்தின் மூலமாக ஏழைகளுக்கு உதவி செய்து வருகிறார். பல கிராமங்களுக்கு சென்று வறுமையில் இருப்போர்க்கு நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார்.
தனது பிறந்தநாளில் ஒரு முதியோர் இல்லத்திற்காக ஆம்புலன்ஸ் ஒன்றை வழங்கினார். அதற்கு அடுத்தபடியாக ஈரோடு மாவட்டம் கடம்பூர் பகுதியைச் சுற்றியுள்ள பன்னிரெண்டு மலைவாழ் கிராமங்களில் சுமார் 8000 மக்கள் வசித்து வருகின்றனர். எந்த ஒரு அவசர கால மருத்துவ சிகிச்சைக்காக மக்கள் 16 கிலோமீட்டர் பயணிக்க வேண்டியுள்ள காரணத்தால் ஏற்படும் கால தாமதத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். அதனால் அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாலாவின் உதவியை நாடியிருக்கிறார்.
அதைக் கேட்டதும் எதை பற்றியும் யோசிக்காமல் அந்த கிராமங்களுக்காக ஆம்புலன்ஸை தானமாக வழங்கியுள்ளார் பாலா. இதை பற்றி பாலா கூறுகையில், நான் வெளிநாட்டில் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளின் வாயிலாக சம்பாதித்த பணத்தை வைத்து தான் ஆம்புலன்ஸ் வாங்கியுள்ளேன். மேலும் நான் ஒரு அறக்கட்டளையை தொடங்கி இருக்கிறேன். யாரிடமும் பணஉதவி வாங்காமல் எனது சொந்த வருமானத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு உதவி செய்ய விரும்புகிறேன்.
இந்த ஆண்டிற்குள் இன்னும் 10 ஆம்புலன்சுகள் வாங்கி தானம் செய்ய வேண்டும் என்பதை இலக்காக வைத்திருக்கிறேன். நான் வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களை அனுபவித்து இருக்கிறேன். சிலர் எனக்கு உதவி செய்தார்கள். ஒரு நல்ல துணி எடுக்க கூட முடியாத நிலையில் இருந்திருக்கிறேன். அப்போது எனக்கு நல்ல நல்ல துணிகளை எடுத்து தந்து என்னை போடச் சொல்லி அண்ணன் தாடி பாலாஜி என்னை அழகுப் பார்ப்பார். அதை என் வாழ்நாளில் என்றும் மறக்கவே மாட்டேன். என்னால் முடிந்த வரையில் அனைவருக்கும் உதவி செய்து கொண்டு தான் இருப்பேன் என்று கூறினார்.