இசைஞானி இளையராஜா அவர்களின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா அவர்களுக்கு அறிமுகம் தேவை இல்லை. தனது தந்தையை போலவே தனது இசையால் இளைஞர்களின் மனதை கட்டிப்போட்டவர். தனிமையில் வாடுபவர்களுக்கு யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்கள் அருமருந்தாக இருக்கும்.
யுவன் ஷங்கர் ராஜா தமிழ் சினிமாவின் மிக பிரபலமான இசையமைப்பாளர் மட்டுமல்லாமல் பாடலாசிரியர் மற்றும் பின்னணி பாடகர் ஆவார். தமிழ் சினிமாவில் ஹிப் ஹாப் இசையை அறிமுகப்படுத்தியவர் மற்றும் ரீமிக்ஸ் பாடல்களை அறிமுகப்படுத்தி அதனை பிரபலப்படுத்தியவர் யுவன் ஷங்கர் ராஜா என்பது குறிப்பிடத்தக்கது.
1996 ஆம் ஆண்டு தனது பதினாறு வயதிலேயே ‘அரவிந்தன்’ என்ற படத்திற்கு இசையமைத்து அறிமுகமானார் யுவன் ஷங்கர் ராஜா. 2001 ஆம் ஆண்டு தனுஷ் நடித்த ‘துள்ளுவதோ இளமை’ திரைப்படத்தில் இசையமைத்து பிரபலமானார் யுவன் ஷங்கர் ராஜா.
2000களின் நடுப்பகுதியில் தமிழ் சினிமாவின் மிகவும் விரும்பப்பட்ட இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வந்தார் யுவன் ஷங்கர் ராஜா. எண்ணிலடங்கா வெற்றித் திரைப்படங்களுக்கு இசையமைத்த யுவன் ஷங்கர் ராஜா இரண்டு பிலிம்பேர் விருதுகள், சிறந்த இசையமைப்பாளருக்கான விருதுகளை வென்றவர். இவரது அண்ணன் கார்த்திக் ராஜா இசையமைப்பாளர் மற்றும் அக்கா பவதாரிணி பிண்ணனி பாடகி ஆவார்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் புற்று நோயால் பாதிக்கப்பட்ட பவதாரிணி காலமானார். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் விஜய் ‘கோட்’ திரைப்படத்தில் நடித்து வெளிவர உள்ளது. இப்படத்தில் ஒரு பாடலை பவதாரிணி புற்றுநோய் சிகிச்சை முடிந்து வந்த பின்னர் அவரை பாட வைக்க வேண்டும் என்று வெங்கட் பிரபுவும் யுவனும் நினைத்தார்களாம். ஆனால் அதற்குள் பவதாரிணி இறந்துவிட்டாராம்.
நேற்று விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு ‘கோட்’ படத்தில் இருந்து ‘சின்ன சின்ன கண்கள்’ பாடல் வெளியாகி உள்ளது. இப்பாடலில் AI தொழில்நுட்பம் மூலம் தனது அக்கா பவதாரிணி குரலை பயன்படுத்தி இருக்கின்றனர். இதைப் பற்றி பேசுகையில், என் அக்காவின் குரலை இந்த மாதிரி பயன்படுத்துவேன்னு நினைக்கல என்று எமோஷனலாகவும் உருக்கமாகவும் பேசியுள்ளார் யுவன் ஷங்கர் ராஜா.