ரஞ்சித் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் ஆவார். 1993 ஆம் ஆண்டு ‘பொன்விலங்கு’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ரஹ்மான், சிவரஞ்சனி, ரம்யா கிருஷ்ணன் ஆகியோருடன் இணைந்து நடித்தார்.
1996 ஆம் ஆண்டு ‘மைனர் மாப்பிள்ளை’ திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகனாக நடித்தார். 1997 இல் சேரனின் ‘பாரதி கண்ணம்மா’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தார். இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றிப் பெற்றதோடு ரஞ்சித் அவர்களின் நடிப்பிற்கான பாராட்டையும் பெற்றது.
பின்னர் 1998 ஆம் ஆண்டு மம்மூட்டி நடித்த ‘மறுமலர்ச்சி’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் மூலம் பிரபலமானார். இந்த திரைப்படத்திற்காக சிறந்த வில்லனுக்காக தமிழ்நாடு அரசு மாநில விருதை வென்றார்.
அதைத் தொடர்ந்து சேரன், சோழன், பாண்டியன், சபாஷ், சுதந்திரம், நினைவிருக்கும் வரை, நரசிம்மா, பாண்டவர் பூமி, தம்பிக்கு எந்த ஊரு ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் ரஞ்சித். தற்போது விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், ரஞ்சித் ‘குழந்தை C/O கவுண்டம்பாளையம்’ என்ற திரைப்படத்தை இயக்கி நடித்துள்ளார். அத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கண்கலங்கி பேசியுள்ளார். அவர் கூறியது என்னவென்றால், என்னை சினிமாவில் அறிமுகப்படுத்தியது தயாரிப்பாளர் ஆர். கே. செல்வமணி அவர்கள் தான். அவர் என்னிடம் நீ ஜெயிச்ச பின்பு என்னை பார்க்க வா, ஜெயிக்கவில்லை என்றால் என்னை பார்க்க வராதே என்று சொல்லிவிட்டார். அதற்குப் பிறகு அவரை நான் சந்திக்கவேயில்லை, எதோ நான் இன்னும் ஜெயிக்கவில்லை என்ற உணர்வு எனக்குள் இருந்துக் கொண்டே இருக்கிறது என்று கண் கலங்கி பேசியுள்ளார் நடிகர் ரஞ்சித்.