‘ஊரு விட்டு ஊரு வந்து’ பட ஷூட்டிங்கில் எனக்கு மிகப்பெரிய விபத்து நடந்தது… அதில் பிழைத்ததே பெரிய விஷயம்… ராமராஜன் பகிர்வு…

By Meena

Published:

‘கிராமத்து நாயகன்’, ‘மக்கள் நாயகன்’ என்ற பெயர்களை கொண்டவர் நடிகர் ராமராஜன். 80 களின் இறுதியில் புகழின் உச்சத்தில் இருந்தவர். கிராமம் சார்ந்த படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்து பிரபலமானபவர். இவர் நடித்த ‘கரகாட்டக்காரன்’ திரைப்படம் இன்றளவும் நடிகர் ராமராஜனின் பெயரைச் சொல்லும்.

முதலில் உதவி இயக்குனராகவும், இயக்குனராகவும் பணிபுரிந்தவர் பின்னர் முழுநேர நடிகரானார். 1985 ஆம் ஆண்டு ‘மண்ணுக்கேத்த பொண்ணு’ என்ற திரைப்படத்தை நடிகர் ராமராஜன் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 1986 ஆம் ஆண்டு ‘நம்ம ஊரு நல்ல ஊரு’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

1989 ஆம் ஆண்டு ‘கரகாட்டக்காரன்’ திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் ப்ளாக்பஸ்டர் ஹிட் ஆனது. ஒரு வருடத்துக்கு மேல் திரையரங்கில் ஓடி சாதனை படைத்தது. அடுத்தடுத்து அவர் நடித்த ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’, ‘ஊரு விட்டு ஊரு வந்து’, ‘வில்லுபாட்டுக்காரன்’ போன்ற படங்கள் வெற்றி பெற்று கிராமங்களில் கொடி கட்டி பறந்தார் நடிகர் ராமராஜன்.

2000 களில் இவரது படங்கள் தோல்வியை சந்தித்தன. சினிமாவில் இருந்து ஓய்வு எடுத்துக் கொண்டு அரசியலில் இறங்கி நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றனர். தற்போது ஒரு நேர்காணலில் கலந்து கொண்டுள்ள நடிகர் ராமராஜன் பழைய நினைவுகளை பகிர்ந்துள்ளார். அதில் ‘ஊரு விட்டு ஊரு வந்து’ பட ஷூட்டிங்கில் நடந்த விபத்தைப் பற்றியும் பேசியுள்ளார்.

அவர் கூறியது என்னவென்றால், ‘ஊரு விட்டு ஊரு வந்து’ திரைப்படத்தின் ஒரு காட்சியை தாய்லாந்து பட்டாயா கடலில் எடுத்தோம். அப்போது படகில் பொருத்தப்பட்ட பாராசூட்டில் பறக்க வேண்டிய காட்சி படமாக்கப்பட்டது. அந்த காட்சியில் நடிக்கும் பொழுது எதிர்பாராதவிதமாக பாராசூட் கீழே விழுந்துவிட்டது, நானும் அதோடு கடலில் விழுந்துவிட்டேன். அந்த பாராசூட் நேராக என் மேல் விழுந்திருந்தால் நான் செத்திருப்பேன், ஆனால் அது சைடில் விழுந்ததால் நான் உயிர் பிழைத்துக் கொண்டேன் என்று அந்த சம்பவத்தை பகிர்ந்துள்ளார் நடிகர் ராமராஜன்.