இந்தியா முழுவதும் ஊரடங்கானது மார்ச் 24 ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 14 ஆம் தேதி வரையும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் மே 3 ஆம் தேதி வரையும், மூன்றாம் கட்டமாக மே 4 ஆம் தேதியில் இருந்து மே 17 வரையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் சினிமாப் படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாததால், சினிமாப் படப்பிடிப்புகள் உட்பட மிக முக்கிய தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் சினிமாத் தயாரிப்பாளர்கள் நஷ்டத்தை ஈடுகட்ட தமிழ் நடிகர் அருள்தாஸ், தான் 2020 ஆம் ஆண்டு நடிக்கும் படங்களுக்கு சம்பளம் எதுவும் தேவையில்லை என்று கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது, “ நான் “நான் மகான அல்ல” படத்தின்மூலம் ஒளிப்பதிவாளராக எனது சினிமாப் பயணத்தைத் துவக்கி 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. தற்போது துணை நடிகனாகவும் வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்து வருகின்றன. உண்மையில் எனக்கு இந்த வாய்ப்பினைக் கொடுத்த இயக்குனர்களுக்கும், சம்பளம் கொடுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் நான் ஏதாவது நன்றிக்கடனாக செய்ய நினைத்தேன்.
என்னால் பெரிய அளவில் உதவிகள் செய்யாமுடியவில்லை என்றாலும், நான் 2020 ஆம் ஆண்டு முழுவதும் நடிக்கும் படங்களுக்கு சம்பளம் எதுவும் வாங்காமல் நடித்துக் கொடுக்க விரும்புகிறேன்.
நான் பெரிய அளவில் சம்பளம் வாங்கும் நடிகனாக இல்லாவிட்டாலும், என்னுடைய தேவைகளை நான் எப்படியாவது சமாளித்துக் கொள்வேன். நிச்சயம் முதலாளிகளுக்கும், நண்பர்களுக்கும் நான் செய்யும் கைமாறாக இதை நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.